அவுஸ்திரேலியாவில் அகதி விண்ணப்பம் சமர்ப்பிக்காதவரா நீங்கள்..? அரசின் அதிரடி முடிவு!!

அவுஸ்திரேலியாவில் படகு வழி புகலிடம் தேடிவந்தவர்கள் தங்களின் பாதுகாப்பு வீசா விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்காதவர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்படுவதாக குடிவரவு அமைச்சர் Peter Dutton அறிவித்துள்ளார்.

ஒகஸ்ட் 2012 முதல் ஜனவரி 2014 வரை படகு வழி தஞ்சம்கோரி வந்தவர்கள் 2017 ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னதாக தமது அகதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அரசு கடந்த மே மாதம் காலக்கெடு ஒன்றை விதித்திருந்தது.

இதன்படி 7429 புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது பாதுகாப்பு வீசா விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளதாக அமைச்சர் Dutton தெரிவித்தார்.

இதேவேளை குறித்த காலக்கெடுவுக்கு முன்னதாக பாதுகாப்பு வீசா விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யாத சுமார் 71 புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அரச கொடுப்பனவுகள் நிறுத்தப்படுவதாக  அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் காலக்கெடு முடிவடைவதற்குள் அகதி விண்ணப்பம் சமர்ப்பிக்காதவர்களுக்கு மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை தமக்கு கிடைத்திருக்கும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதில் நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரிகள் தமது தாய்நாட்டிற்குத் திருப்பியனுப்பப்படுவர் எனவும் குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.