சிட்டுக்குருவிக்கு இறுதிச் சடங்கு: நெகிழ வைக்கும் சம்பவம்!!

இந்தியாவின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், இறந்துபோன சிட்டுக்குருவி குஞ்சுக்கு இறுதிச் சடங்கு செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பெரிய நாயக்கன் பாளையம் அருகிலுள்ள, இடிகரை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், தனது வீட்டில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கான இடங்களை அமைத்துத்துள்ளார். அந்த இடத்தில் ஏராளமான சிட்டுக்குருவிகள் வசிக்கின்றன.

சில தினங்களுக்கு முன் அதில் ஒரு சிட்டுக்குருவி தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிகளில் மேல் மூன்று குஞ்சுகளைப் பொரித்தது.

தினமும் வெளியே சென்று, தாய் சிட்டுக்குருவி தனது குஞ்சுகளுக்கு இரை தேடிக் கொண்டுவந்து ஊட்டி வளர்த்து வந்தது.

கடந்த திங்கள் அன்று (13.11.2017), வழக்கம் போலக் குஞ்சுகளுக்காக இரை தேடத் தாய்க்குருவி சென்றது.

அப்போது, கூட்டில் இருந்த குஞ்சு ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்துபோனது.

இறந்துபோன குஞ்சை செல்வராஜ் வெளியே எடுத்து, சுவர்மீது வைத்துவிட்டுத் தாய்க்குருவியின் வருகைக்காகக் காத்திருந்தார்.

குஞ்சு இறந்துபோனதை அறியாத தாய்க்குருவி, அதற்கு இரை அளிக்க முயற்சி செய்தது.

ஆனால், குஞ்சு வாயைத் திறந்து இரையைப் பெறவில்லை. அப்போதுதான், தாய்க்குருவிக்கு குஞ்சு இறந்துபோனது தெரியவந்தது.

இதனால், தாய்க்குருவி சோகத்தில் ஆழ்ந்தது. நடந்த சம்பவத்தை செல்வராஜ் பார்த்துக்கொண்டிருந்தார்.

பின்பு இறந்துபோன சிட்டுக்குருவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த செல்வராஜ் குடும்பத்தினர் முடிவுசெய்து, மாலை மரியாதை செய்து, அடக்கம் செய்தனர்.