தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!-

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் இடம்பெற்று தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைகழக கலைப்பீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக பதிவாளரிடம் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இவ் மோதல் சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து கலைப் பீடத்தின் நுண்கலை மற்றும் சட்ட பீடங்களை தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த 3ஆம், 4ஆம் வருட மாணவர்களுக்கு தற்காலிக பல்கலைகழகத்துக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் விடுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக துனைவேந்தர், மாணவ ஆலோசகர்கள், ஒழுக்காற்றுத்துறையினர் கூடி ஆராய்ந்ததன் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை இப் பிரச்சனை தொடர்பாக மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும்.

மேலும் இப் பிரச்சினை குறித்து விடயத்தில் இதற்கு தீர்வு காணப்படும்.

மேலும் இதன்போது இச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மாத்திரமே வகுப்புத் தடைகள் விதக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏனைய மாணவர்களுக்கான வகுப்புக்கள் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் அது தொடர்பான முடிவுகள் எதிர்வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழருவி நிருபர் எஸ்.நிதர்ஷன்