பேருந்தில் உதவி கோருவதைப்போல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள்!!

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பணப் பைகளை கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் அம்பலன்தோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி மாத்தறையில் இருந்து எம்பிலிபிடிய நோக்கி பயணித்த பெண் ஒருவரின் பணப்பை கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பஸ்ஸில் உதவி கோரிய இருவர் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, குட்டிகல பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

எனவே, அவர்களது வீட்டுக்கு பொலிசார் சென்ற வேளை, சந்தேகநபர் தப்பி ஓடியதோடு, அவரது மனைவி கொள்ளையிட்ட கைப் பையை மறைக்க முற்பட்ட போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கேகாலை – யடியன்தொட பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு சிகிச்சையளிக்கவும் ஊனமுற்ற பிள்ளைகளுக்கு சிகிச்சையளிக்கவும் பணம் வேண்டும் எனக் கோரி, அவர்கள் பேருந்துகளில் நிதி சேகரித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் தனது சகோதரனுடன் இணைந்து நீண்ட நாட்களாக இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த பெண்ணின் வீட்டில் இருந்த மெத்தைக்கு கீழ் இருந்து நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு சிறுவர்கள் மற்றும் நபர்களில் புகைப்படங்கள் மற்றும் வைத்திய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையினை மேற்கொண்டுள்ளனர்.