வடபகுதி தமிழ் மீனவர்கள் பலத்த சவால்களை எதிர்கொள்கிறார்கள்!!

வடபகுதி தமிழ் மீனவர்கள் தமக்குச் சொந்தமான கடற்பரப்புக்களில் மீன்பிடி செய்வதில் பலத்த சவால்களை எதிர்கொள்கிறார்கள் என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கவலை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எமது வடபகுதி தமிழ் மீனவர்களின் தொழில் நிலையில் 2009ஆம் ஆண்டிற்கு பின்பு ஒரு விடுதலையற்றை நிலையே காணப்படுகின்றது.

இதற்கு சான்றாக, அண்மையில் யாழ்ப்பாணம் காரைநகர்ப் பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது கடற்படையின் அதிவேக கண்காணிப்புப்படகு மோதியதில், நிகழ்விடத்திலேயே மீனவர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதே போல முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழ் மீனவர்களின் படகுமீது தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் படகால் மோதியிருக்கிறார்கள்.

தமிழ் மீனவர்கள் கடலில் குதித்ததால் உயிர் பிழைத்துள்ளனர். இது போன்ற செயற்பாடுகள் கண்டனத்துக்குரியவை என்று ரவிகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில்; மீனவர்கள் தொன்றுதொட்டு கடற்றொழில் செய்துவந்த நீண்ட கடற்பரப்புக்களையும் மீனவர்களின் ஒருபகுதி இறங்குதுறையையும் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

மேலும் கொக்கிளாய் பகுதியில் ஏற்கனவே எமது தமிழ் மீனவர்களினுடைய தொழில் செய்கிற படகு, வலை முதலான பொருட்கள் எரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கொக்கிளாய் மீனவர்களுக்கு இறங்குதுறை இல்லாத நிலையும் இன்றுவரை தொடர்கிறது.

இவ்வாறாக எமது வடபகுதி தமிழ் மீனவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் அண்மைக்காலமாக வலுப்பெற்று வருகின்றது.

மேலும் வடபகுதியில் தென்னிலங்கை மீனவர்களைக் குடியிருத்தி, எமது வட பகுதி தமிழ் மீனவர்களுடைய தொழில் நிலைக்கு வேட்டு வைத்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

இவ்வாறாக எமது தமிழ் மீனவர்கள் சொந்தக் கடற்பரப்பில், தொன்றுதொட்டு தொழில் செய்த இடங்களில் தற்போது உரித்தற்று அச்சத்துடன் தொழில் செய்வது கவலைதரும் பற்றியமாகும் என்று தெரிவித்தார்.

யாழருவி நிருபர் எஸ்.நிதர்ஷன்