2500 வீட்டுத் திட்டத்தினை அமைத்து தேர்தலை எதிர்கொள்வது தான் திட்டம்!!

எதிர்வரும் 3 வருடங்களில் 2500 வீட்டுத்திட்டத்தினை அமைத்து தேர்தல் ஒன்றினை எதிர்கொள்வதே நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்கு என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் சீடா மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையும் இணைந்து மேசன் தொழில் பயிற்சியை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கு தொழில் உபகரணம் வழங்கும் நிகழ்வு யாழ்.திருமறைக்கலாமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேசன் தொழில் பயிற்சியினைப் பெற்ற உங்களுக்கு மாதாந்தம் 60 ஆயிரம் ரூபாய் வருமானத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.

வடமாகாண அரசியல் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வடமாகாணத்தில் 2551 வீடுகளும் 43 கிராமங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிகழ்வுகள் ஆரம்பம் மட்டுமே. எதிர்வரும் 2018 மற்றும் 2019, 2020 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் வடமாகாண மக்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைக்கும்.

தேசிய வீடமைப்பு அமைச்சினால் புதிதாக குடிநீர் மற்றும் மின்சாரம் வசதிகள் உள்ளடங்கலாக கட்டப்பட்டு வரும் 49 வீடுகளும் திறந்து வைப்பதற்கு நான் 49 தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வேன் என்றார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் 37வது வீட்டினை திறந்து வைக்கவுள்ளோம். நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நாடுமுழுவதும் 439 திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். இந்த வருடத்திற்குள் 500 வீட்டுத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

எதிர்வரும் 3 வருடங்களில் 2500 வீட்டுத்திட்டத்தினை அமைத்து ஒரு தேர்தல் ஒன்றிற்கு முகம் கொடுக்கவேண்டுமென்பதே எமது நோக்காக இருக்கின்றது.

நாங்கள் அனைவரும் எந்த விதத்திலும் மத மற்றும் ஜாதி வித்தியாசம் இல்லாமல் ஒரே நாட்டு மக்கள் என்ற வகையில், சகோதரத்துவத்தினையும் அன்பை, சமாதானத்தினையும் பகிர்ந்து வாழ வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நல்லிணக்க முயற்சிகளில் பயணித்துக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் நாங்கள் அனைவரும் இன மத சாதி வேற்றுமையின்றி நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் இந்த நாட்டில் வாழ வேண்டும்.

எமது உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். எமது உரிமைகள் துரிதப்படுத்திக்கொண்டு செல்ல வேண்டும். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

நாட்டில் நிலவும் சமாதானத்தினைப் பார்த்து சிலர் பொறான்மைப்படுகின்றார்கள். இதனால் வடக்கில் பாதுகாப்பு இல்லை.

வடக்கில் நிலமைகள் சரியில்லை என்ற கதைகளை உருவாக்கி பொய்யான பிரச்சாரங்களைச் செய்தவன் மூலமாக எமது நாட்டினைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றார்கள்.

ஆனால், நான் இன்றையதினம் ஒரு அமைச்சராக இல்லாமல் சாதாரண மனிதனாக இரு பாதுகாப்பு உத்தியோகத்தருடன், தனிமையில் வந்துள்ளேன்.

வடக்கில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதனை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக நான் இந்த பயணத்தினை மேற்கொண்டுள்ளேன். நாட்டில் உள்ள மக்களிடையே பிளவினை ஏற்படுத்த வேண்டுமென்று சில முயற்சிக்கின்றார்கள்.

அதனால் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி, வெட்டுக்களையும் சீரழிவுகளையும் ஏற்படுத்தும் முயற்சிகளை பாதகமாக்குவதற்காகவே இன்று தனிமையில் பயணத்தினை மேற்கொண்டுள்ளேன்.

எமது நாட்டினை கட்டி எழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. எனவே, பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பவர்களை எதிர்த்து நாம் அனைவரும் நல்லிணக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றார்.

யாழருவி நிருபர் பகலவன்