மூன்று அணிகளாக உடையுமா அ.தி.மு.க?

உள்ளாட்சி தேர்தல் களத்தில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா இவர்கள் அனைவரும் தனித்தே போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அக்கட்சியின் வாக்குகள் சிதறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்-அமைச்சராக இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவர் வகித்த முதல்-அமைச்சர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் அமர்ந்தார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் முதல்-அமைச்சராகவும் அவர் முயற்சி செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். இதனால் அ.தி.மு.க. 2 ஆக உடைந்தது. சசிகலா ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். சொத்துக் குவிப்பு முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பன்னீர் செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் சந்தித்து பேசினர். அ.தி.மு.க.வில் 2 கரங்களாக நானும் பன்னீர்செல்வமும் செயல்படுவோம் என்று தீபா தெரிவித்தார். இதனால் தமிழக அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவதற்கு தீபா திடீரென மறுத்துவிட்டார். தீபா பேரவையின் நிர்வாகிகள், தனித்தே செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியதை தொடர்ந்து அவர் தனி அமைப்பை தொடங்கியுள்ளார். ‘‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’’ என்ற பெயரில் பேரவையை தொடங்கி உள்ள தீபா, தனிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் ஏற்கனவே அ.தி.மு.க.வில் 3-வதாகவும் பிளவு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் உள்ள சசிகலா எதிர்ப்பாளர்கள் பலர் ஓ.பி.எஸ்.சுடன் கை கோர்த்து செயல்பட்டு வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வில் ஏற்கனவே சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என 2 அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன. அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினரே தீபாவையும் ஆதரித்து வந்தனர். தற்போது தீபாவும் புது அமைப்பை தொடங்கி இருப்பதால் அ.தி.மு.க.வின் 3-வது அணியாகவே அது பார்க்கப்படுகிறது. இப்படி ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. 3 துண்டுகளாக உடைந்து கிடக்கிறது.

இதுபோன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மே மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களம் நிச்சயம் அ.தி.மு.க.வுக்கு சோதனை களமாகவே இருக்கும். அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள விரிசல் உள்ளாட்சி தேர்தல் நேரத்திலும் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இனி அ.திமு.க.வில் ஒன்று சேர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. அதே நேரத்தில் தீபாவும் அ.தி.மு.க.வினரை தனியாக ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கி விட்டார். இதனால் உள்ளாட்சி தேர்தல் களத்தில் இவர்கள் அனைவரும் தனித்தே போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி இருக்கிறது. இப்படி அ.தி.மு.க. 3 பிரிவாக பிரிந்து தேர்தலை சந்தித்தால் அக்கட்சியின் வாக்குகள் சிதறும். இது அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை நிச்சயம் பாதிக்கும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.