போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பறக்கும் கார்கள் அறிமுகம் (வீடியோ)

உலகம் முழுவதும் வாகனப் பெருக்கத்தால் பெருகிவரும் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையிலும், வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற ‘பாப் அப் சிஸ்டம்’ (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பாப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியதாக இருக்கும் என தெரியவந்துள்ளது. கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கி செல்கிறது.

சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாக கடந்து செல்ல வேண்டும் என்று கருதும் நேரத்திலும், ‘டுரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

இதற்காக, வானத்தில் வட்டமடித்தபடி வரும் ஆளில்லா விமானம் சாலையில் நிற்கும் ‘பாப் அப் சிஸ்டம்’ காரின் மேலே உட்கார்ந்து கொள்ளும். இந்த காரின் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் சாலையில் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் வரை தொடர்ந்து செல்ல முடியும் என்பது மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.

கோழியின் கழுத்தை கழுகு திருகுவதைப்போல் காரின் உடல் பகுதியை சக்கரங்களில் இருந்து தனியாக பிரித்தெடுத்து பறந்து செல்ல முடியும் என இந்த பறக்கும் கார்களை தயாரிக்கும் ஆராய்ச்சியில் கூட்டாக ஈடுபட்டுவரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏர்பஸ் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த இட்டால்டிசைன் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த பொறியாளர்கள் கருதுகின்றனர்.

எதிர்வரும் 2030-ம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்படும் வாகனப் பெருக்கம் காற்று மாசுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இத்தகையை கார்களை விரைவில் உருவாக்கும் முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் படுவேகமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.