மார்ச் 20: உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று..!!

உலக சிட்டுக்குருவிகள் நாள் 2010 ஆம் ஆண்டில் இருந்து மார்ச் 20 ஆம் திகதி உலகெங்கும் நினைவுகூறப்படுகிறது.

சங்க இலக்கியங்களில், ‘குரீஇ’ என அழைக்கப்பட்ட பறவை இன்று மருவி குருவியானது. ஊர்க்குருவி, வீட்டுக்குருவி, தவிட்டுக்குருவி எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் சிட்டுக்குருவி இன்று அழிந்துவரும் நிலையில் உள்ளது. ஒரு பறவை இனம் அழியும் போது ஒரு தாவரமும் அழிக்கப்படுகிறது என்பதை யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாத உண்மை.

அலைபேசிகளின் வருகைக்குப் பின்னரே, சிட்டுக்குருவிகளின் அழிவு அதிகரித்துவிட்டன. அலைபேசிக்கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிப்போய்விடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதேவேளை குருவிகள் வாழ்வதற்கான இருப்பிடம் இல்லாமல் போனதும், வயல்வெளிகளில் பயிர்களுக்கு ரசாயனத் தெளிப்பும் பிறிதொரு காரணம். எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையினால் காற்று மாசடைந்து சிட்டுக்குருவிகளை வாழ வைக்கும் பூச்சின இனங்கள் அழிகின்றன. இதனால் உணவின்றி சிட்டுக்குருவிகளும் அழிவுநிலைக்கு தள்ளப்படுகிறது. அழிந்துவரும் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதற்கு, கிராம மக்கள், பள்ளி குழந்தைகள் மத்தியில் சிட்டுக்குருவிகளை வளர்க்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தி சிட்டுக்குருவி இனத்தைப் பெருக்குவதற்கு ஏதுவாக, விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறார்கள் ஆர்வலர்கள்.

சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் சில முக்கிய காரணங்களே. இன்று இயந்திர உலகமாக மாறிவரும் நிலையில் பல்பொருள் அங்காடிகள் அதிகரித்ததால் நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுகின்றன. வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லாமல் போனதால், சிட்டுக்குருவிகளின் நிலையும் கேள்விக்குறியானது. வீடுகளில் சிட்டுக்குருவிக்கென்று ஓர் அடைக்கலம் இல்லாமல், குளிரூட்டப்பட்ட அறைகளாக மாறும் மனிதனின் இருப்பிடங்களாலும், சிட்டுக்குருவிகள் காணமால் போய்விடுகின்றன.

சிட்டுக்குருவிகளால் மனிதனுக்கு என்றும் தொல்லையே இல்லை. மாறாக மனிதனால் அன்றாட தொல்லைகளை எதிர்நோக்கி அழிந்துகொண்டிருக்கிறது சிட்டுக்குருவிகள் இனம். 13 ஆண்டுகளே இவ்வுலகில் வாழும் சிட்டுக்குருவி இனம் தனது வாழ்நாள் முடிவதற்கு முன்பே அழிவின் விளிம்பிற்கு சென்றுவிடுகிறது. வனவாசத்தைவிட மனிதவாசத்தை நோக்கியே நகரும் சிற்றின சிட்டுக்குருவி இனங்களுக்கு மனிதர்களால் தான் ஆபத்துக்கள் ஏற்படுகிறது என்பது துன்பியலே.

RJ Bharathi