சசிகலாவின் அரசியல் பிரவேசத்திற்கு தேர்தல் ஆணையம் ஆப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுள்ள சசிகலா தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தாலும் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இதற்கு உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளதாக தெரியவருகிறது.

இந்தநிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுள்ள சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால், அவர் விடுதலை ஆன பின்னர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரை அமுலுக்கு வந்தால் சசிகலா வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்றும் சசிகலாவின் அரசியல் வாழ்க்கை கனவு இதோடு தகர்ந்து விடும் எனவும் கூறப்படுகிறது.