டிரம்பின் வெற்றிக்கு ரஷ்யா உதவியது உண்மையா ? – FBI விசாரணை

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அவர் வெற்றி பெற்றதற்கு, ரஷ்யா உதவியது என்று பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதை, டிரம்ப் தரப்பு மறுத்தது. ஆனால், எதிர்த் தரப்பினரான ஜனநாயகக் கட்சி, தொடர்ந்து இது பற்றி புகார் எழுப்பிவந்தது. இதுகுறித்து, விசாரணை நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க உளவுத்துறை அமைப்பான FBI-ன் இயக்குநர் ஜேம்ஸ் கோமி, ‘2016-ம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு உள்ளதா என்பது பற்றி விசாரித்து வருகிறோம். டிரம்ப் பிரசாரக் குழுவில் இருந்தவர்களுக்கும் ரஷ்ய அரசாங்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருந்ததா என்னும் கோணத்தில்கூட விசாரணை நடைபெற்று வருகிறது.’ என்று கூறியுள்ளார்.

பல மாதங்களாக, அமெரிக்காவில் பெரும் பரபரப்பைக் கிளப்பிவந்த இந்த விஷயத்தில், FBI அமைப்பின் இயக்குநர் இப்படி ஒரு கருத்தைக் கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ‘டிரம்ப் தனது போன் லைனை, ஒபாமா நிர்வாகம் ஒட்டுகேட்டது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.’ என்று தெரிவித்துள்ளார்.