இலங்கையில் நிலை மாறுகால நீதி மற்றும் நல்லிணக்க முன்னெடுப்பு குறித்து ஐ.நா.விற்கு பகிரங்க மடல்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வின் பேராளர்களுக்கு இலங்கையில் நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்க முன்னெடுப்புகளின் நிலவரம் குறித்து வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் பகிரங்க மடலொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் 2015 ஒக்டோபர் 1ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வில் இலங்கை தொடர்பாக ஏற்கப்பட்ட தீர்மானம் 30/11 காலநீட்டிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ள தருவாயில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் 34 அமர்வின் பேராளர்களுக்கு எமது கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.

அந்த வகையில் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் குறைபாடுகள், காணாமலாக்கப்பட்டமை சார்ந்து அரசின் நிலைப்பாடும் சாட்சிகளுக்கு பாதுகாப்பின்மை, பயங்கரவாதத் தடைச்சட்டம், அரசியல் கைதிகள், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளும் பாலியல் குற்றங்களும், மகாண சபைகளின் அதிகாரத்தை குறைக்கும் அபிவிருத்தி சட்டமூலம், வடக்கு கிழக்கில் மீள குடியேற்றம் முழுமையாக நடைபெறாமை மற்றும் ராணுவ மயமாதல், ஐ.நா. சமாதான நிதியம் , ராணுவத்தால் பரிகரணம் , மனித உரிமைப் பாதுகாவலர்கள் அச்சுறுத்தப்படல், நீதிப் பொறிமுறையில் பாரபட்சம் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலைமாறுகால நீதி செயற்பாடுகள் ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்கப்படவும், நிலையான நல்லிணக்கத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக்கொண்டு பின்வரும் கோரிக்கைகளை தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஐ.நா., இலங்கையின் நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகளில் இணைப்பங்காளியாவற்கு இலங்கையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும், சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட நீதிப்பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் , நிலைமாறுகால நீதி சட்டம் உருவாக்கப்பட வேண்டும் , மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதிக்கான அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் பணிக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த ஆவணசெய்ய வேண்டும். அரசியல் கைதிகள் விடுவிப்பு மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை திருத்தி அமைத்தல் சார்ந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் கவனத்திற்கெடுத்து சர்வதேச ஆதாரங்களுக்கு அமைய இவற்றை நடைமுறைப்படுத்த ஆவணசெய்ய வேண்டும்

மனித உரிமைப் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான புலன்விசாரணை நிறுத்தப்பட வேண்டும், படையினர் வசமுள்ள மக்கள் காணிகளும் பொதுக்காணிகளும் மக்களுக்கு மீள கையளிக்கப்பட வேண்டும். இராணுவ மயமாதல் நீக்கப்பட வேண்டும். தீர்மானம ; 30/1 மற்றும் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை தாமதமின்றி அமுல்படுத்த ஆவண செய்ய வேண்டும்

பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பது பற்றிக்கூறும் சீடோவின் பொதுப் பரிந்துரையையும் தீர்மானம் 1325-னையும் உள்ளடக்கி சீடோ சட்டத்தை இலங்கை விரைவில் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளே அந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில் சர்வதேச நீதிப் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் உள்ளிட்ட பேரவைக்கு அனுப்பி வைக்கும் வகையில் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் யாழிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யாழருவி நிருபர் வேலவன்