மகிந்த அரசு வன்வலுவால் செய்ததை மைத்திரி அரசு மென்வலுவால் சாதிக்கிறது – பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

இராணுவத்திடம் இருக்கும் தங்களுடைய நிலங்களைத் தங்களிடம் மீளவும் தாருங்கள் என்று எமது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் அரசாங்கம் வனவளப் பாதுகாப்பு என்ற பெயரால் நிலப்பறிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவ முகாம்களை விரிவுபடுத்துவதற்காக எமது பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டன.

இப்போது பச்சை முகமூடி அணிந்து கொண்டு காடுகளை விரிவுபடுத்துவதற்காக என்று சொல்லி எமது நிலங்கள் சுவீகரிக்கப்படுகின்றன. மகிந்த அரசு வன்வலுவால் செய்ததை, மைத்திரி அரசு மென்வலுவால் சாதிக்கிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மன்னார் பெரியமடுவில் இன்று (20.03.2017) நெல் அறுவடை விழா நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக அமைச்சர் ஐங்கரநேசன் கலந்துகொண்டிருந்தார். இவரிடம், இப்பகுதி விவசாயிகள் இடப்பெயர்வின் காரணமாகத் தங்களுடைய பெரும்பகுதி நிலங்கள் பற்றைக்காடுகளாகி விட்டதால் அவற்றை வனவளத் திணைக்களம் அபகரித்து வைத்துள்ளதாக முறையிட்டிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது உரையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

iyanga2

இராணுவ முகாம்களுக்கென்று நிலங்களைக் கையகப்படுத்தும்போது இங்கு எழும் போராட்டங்களால் அரசுக்குச் சர்வதேச அரங்கில் நெருக்கடி ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக அரசு இப்போது புது உத்தியைக் கையாள ஆரம்பித்திருக்கிறது. சர்வதேச அரங்கில் தனக்கு அவப்பெயர் ஏற்படாத விதத்தில் எமது நிலங்களை வனவளப்பாதுகாப்பு என்ற பெயராலும், வனவள ஜீவாராசிகள் என்ற பெயராலும் சட்டபூர்வமாகக் கையகப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வால் காணிகள் பராமரிப்பில்லாமல் போக, அங்கு மரங்கள் வளர்ந்துள்ளன. அதைக் காரணம் காட்டியே வனவளத் திணைக்களம் தனது காடென்று சொந்தம் கொண்டாடுகிறது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் தமிழர்கள் முஸ்லீம்கள் என்ற வேறுபாடு இல்லாமல் தமிழ்பேசும் மக்கள் எல்லோருடைய நிலங்களும் இவ்வாறு பறிக்கப்பட்டிருக்கின்றன.

iynga4

மாகாணக் காணி ஆணையாரிடம் இது தொடர்பான தகவல்களைத் தருமாறு கோரியிருந்தேன். யுத்தத்தின் பின்னர் வவுனியாவில் 32,017 ஹெக்டர் காணியும் முல்லைத்தீவில் 64,314 ஹெக்டயர் அளவு காணியும்வனவளத் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அறியத்தந்துள்ளார். மற்றைய மாவட்டங்கள்பற்றியதகவல்கள் இதுவரை அனுப்பிவைக்கப்படவில்லை.

காடுகளின் அவசியம், சுற்று சூழற்பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பாக யாரும் சொல்லி எங்களுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், எங்கள் வாழ்நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் சூழல் பாதுகாப்பு என்ற முகமூடியை அணிந்துகொண்டு இந்த அரசு பறிப்பதை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

iyanga3

பெரியமடு கிழக்கு கமக்கார அமைப்பின் தலைவர் நூகூ லெப்பையின் தலைமையில் நடைபெற்ற நெல் அறுவடைவிழாவில் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கன், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வே.பிரேமகுமார், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.நவநேசன் ஆகியோருடன் அப்பகுதி விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

யாழருவி நிருபர் வேலவன்