இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா

ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

இந்தியா – அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை நேற்று விளையாடி முடித்த நிலையில், ஐந்தாவது நாளான இன்று அவுஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய பவுலர்கள் 100 ஓவர்கள் வீசிய நிலையில், 204 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை அவுஸ்திரேலியா இழந்த நிலையில், டிராவானது.

அவுஸ்திரேலிய அணி சார்பில், பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்ப் 200 பந்துகளில் 72 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார். ரவீந்திர ஜடேஜா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில், மூன்றாவது ஆளாகக் களமிறங்கிய புஜாரா, இரட்டை சதம் விளாசினார்.

இந்தத் தொடரின் நான்காவது மற்றும் கடைசிப் போட்டி, வரும் 25-ம் திகதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இரண்டு அணிகளும், இதுவரை நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. இந்த டெஸ்ட் போட்டியில், இரு அணிகளும் தொடரை கைப்பற்ற முழு பலத்தைப் பிரயோகிக்கும் என்று தெரிகிறது.