இலங்கையில் சிறிசேனவின் ஆட்சி, சீன அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியளிக்கின்றது – ஜெனரல் சேன்ங்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் சிறந்த முறயைில் காணப்படுவதாகவும், இது சீன அரசாங்கத்திற்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சேன்ங் வான்குவாங் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரியை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடியபோதே சீன பாதுகாப்பு அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு சீன அரசாங்கம் வழங்கிவரும் பயிற்சிகளுக்கும், நாட்டில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கும் இதன்போது நன்றி தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, சீனா தொடர்ந்தும் உதவி வழங்கும் என நம்புவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இரு நாடுகளுக்கிடையே காணப்படும் நட்புறவு காரணமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து உடன்படிக்கைகளும் இலங்கையின் கீர்த்திக்கும் சுதந்திரத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படாதவகையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.