படித்துப் பாருங்கள்.. கலங்கிப் போவீர்கள்: கருகிப்போன வெளிநாட்டுக் கனவுகளுடன் கலைவாணி..!!

வாழ்வதற்கு வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் குடும்பங்களின் நிலை துன்பியல் நிறைந்ததே..!!

தமது வறுமையை துடைத்தெறிய, பணிப்பெண்களாக வேலைக்கும் செல்லும் பெண்கள் முகம்கொடுக்கும் இன்னல்களை வார்த்தையாலும், எழுத்துக்களாலும் எடுத்தியம்பிட இயலாது.

இந்தப் பெண்பட்ட துன்பங்களைப் படித்துப் பாருங்கள்.. கல்மனதும் கசிந்துருகாதோ..!!

அந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட ஏழு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் =, அந்தச் சம்பவத்தை நினைத்து நினைத்து அவள் இன்றும் கண்ணீர் வடித்தவளாகவே இருக்கின்றாள். அதை எப்படி மறப்பது? யாரிடம் சொல்லி ஆறுதல் தேடுவது என்று அவளுக்குத் தெரியவில்லை.

எல்லோரையும் போல் தனக்கென்று ஒரு அழகிய வீட்டை கட்ட வேண்டும், மூன்று வேளை பசியாற வேண்டும், பிள்ளைகள் படித்து பெரிய உத்தியோகத்தில் இருக்க வேண்டும், இப்படியெல்லாம் பல எதிர்பார்ப்புகள் அவளுக்குள்ளும் இருந்தன. அதனால் தான் குடும்பம், பிள்ளைகள், கணவன் என்ற பாசப்பிணைப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு 2010 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவுக்கு பயணமானாள் கலைவாணி.

கலைவாணி நாவலப்பிட்டிய கட்டபுலா தோட்டத்தைச் சேர்ந்தவள். அவளுடைய பெற்றோர்கள் தோட்ட தொழிலாளர்கள். சிறுவயதிலேயே குடும்ப வறுமை காரணமாக தனது பள்ளி வாழ்வை இடைநிறுத்தி விட்டு 13 வயதில் கொழும்பிலுள்ள ஒரு பிரபல தொழிலதிபரின் வீட்டிற்கு வேலைக்கு சென்றாள்.

அவளின் அதிர்ஷ்டம் அந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. தனது 27 வயதில் காளிமுத்து என்பவரை திருமணம் செய்த பின் தனது சொந்த ஊருக்கே வந்து தேயிலைத் தோட்டத்தில் பெயர் பதிந்து வேலைக்கு சேர்ந்தாள்.

காளிமுத்து கூலி வேலையே செய்தான். வாழ்வோடு பின்னிப்பிணிந்த கஷ்டங்கள் இருந்தாலும் கூட, இருவரின் வாழ்வும் மகிழ்ச்சியாகவே நகர்ந்தது. இந்நிலையில் கலைவாணி இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள். எனவே வீடு கட்ட வேண்டும், பிள்ளைகளின் படிக்கவேண்டும் என்ற தேவைகளும் அதிகரித்தன. தேவைகள் அதிகரிக்கும் போது, தேடல்களும் அதிகரிக்கும் என்பார்கள்..!!

அதிகரித்தது தேவைகள்..உருவாகியது பொருளாதார சிக்கல்கள்..

எனவே இத்தகையதொரு சூழ்நிலையில்தான் இரண்டு வருடத்துக்கு வெளிநாட்டுக்குச் சென்று தொழில்புரிவோம் என்ற எண்ணம் கலைவாணிக்கு உதயமானது. அதற்கு ஏற்றதாற் போல் ஏஜன்சியொன்றை சேர்ந்த தரகரொருவரும் வந்து ஆசைக் காட்டினான். அதனால் கலைவாணி அந்த தரகர் மூலமாக சவுதி அரேபியா செல்ல ஆயத்தமானாள். அதுமட்டுமின்றி, அவள் செல்லும் முன் 1 இலட்சம் ரூபாவை முற்பணமாகத் தருவதாக அந்த தரகர் உறுதியளித்தான்.

கலைவாணியும் அதை நம்பி தன்னிடம் இருந்த நகைளை அடகு வைத்து பயணத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தாள். போகும் தருணமும் வந்தது. ஏற்கனவே கூறிய படி தரகர் “நீ அங்கு சென்று இறங்கியவுடன் பணத்தை உன் கணவரிடம் கொடுக்கின்றேன்” என உறுதியளித்தான்.

அதனைதொடர்ந்து கலைவாணி குழந்தைகளை கணவரின் பொறுப்பில் விட்டு விட்டு சவுதி பயணமானாள். அவள் போகும் போது மூத்த மகனுக்கு 5 வயதும், இளைய மகளுக்கு 2 வயது இருக்கும்.

ஒருவழியாய் சவூதி றியாத் விமான நிலையத்தை சென்றடைந்தாள் கலைவாணி. கலைவாணியை அழைத்துச் செல்வதற்கு அவள் பணிபுரிய போகும் வீட்டின் எஜமானி அனுப்பியவர்கள் என்று பருத்த உடலமைப்பை உடைய இரண்டு பேர் வந்திருந்தார்கள். எனவே. கலைவாணி தன் கணவருடன் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தான் சவுதியை வந்தடைந்து விட்டதாகவும், தன்னை அழைத்து செல்ல அந்த வீட்டு எஜமானியின் ஆட்கள் வந்திருப்பதாகவும் கூறியதுடன், அந்த தரகர் பணம் கொடுத்தாரா? என்பதையும் மறக்காமல் கேட்டாள்.

அதற்கு கணவன் ‘இல்லை‘ என்று கூறவும் சீக்கிரமாக அதை வாங்கி அடகு வைத்த நகைகளை மீட்குமாறு கணவனுக்கு ஆலோசனை வழங்கினாள். அதுதான் கலைவாணி தனது கணவருடன் கதைத்த கடைசி வார்த்தை. அதன்பின்னர் இருவருக்கு இடையிலான தொலைபேசி தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன.

கலைவாணியின் வெளிநாட்டு தொழில் ஒப்பந்தத்தின் படி (2வருடம்) அவள் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரிலுள்ள வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்ற வேண்டும். எனினும், அவள் றியாத் நகரிலிருந்து தொலைவிலிருந்த செம்மறிஆடுகள் உள்ள பெரிய பண்ணையொன்றுக்கே வேலைக்கு அமர்த்தப்பட்டாள்.

பழக்கமில்லாத சூழல், உணவு, வீட்டாருடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை, அவளை செய்வதறியாது திகைக்க வைத்தது. பல தடவைகள். தனக்கு வேலையை மாற்றி தருமாறு எஜமானியிடம் முறையிட்டாள்.

எனினும் பயனியில்லை. சம்பள பணமும் தரப்படவில்லை. அதற்கு பதிலாக அந்த எஜமானியின் மகன்மார்கள் அவளிடம் தவறாக நடக்க முற்பட்டார்கள். ” நீதான் ஸ்ரீலங்கா குவீன் எங்களை சந்தோசப்படுத்தினால் நாங்கள் உன்னை எப்போது சந்தோஷமாய் வைச்சிருப்போம்” என்று ஆசைவார்த்தைகளை பேசி அவளை அடைய முயற்சித்தனர்.

கல்வியறிவு அறவே இல்லாத பெண்ணுக்கு அறியா நாடு, பரிட்ச்சயம் இல்லாத மொழி, அறிமுகமில்லாத மக்கள். என்ன செய்வது? என்று தெரியாமால் திகைத்தாள். தன் விதி அவ்வளவு தான் என்று உள்ளுக்குள் புலம்பினாள்.

ஒரு நாள் எஜமானி அவளை வீட்டில் வேலை இருப்பதாக கூறி வீட்டுக்கு அழைத்து சென்றாள். அன்று அவளுக்கு கவனிப்பு பலமாக இருந்தது. தாய் உணவு பரிமாற கூடவே மகன்மார்களும் பழங்களையும் வரிசையாக வைத்துப் பரிமாறினார்கள்.

பலியிடுவதற்கு முன் ஆட்டை அலங்கரிப்பார்கள் அல்லவா? அந்தக்கவனிப்பும் அப்படித்தான் இருந்தது. அந்த காமுகர்களின் காமப்பசிக்கு இரையாகப்போவதை மையினை அவள் அன்று அறிந்திருக்கவில்லை. பின்னர் எஜமானி வெளியே சென்றாள். மகன்மார்களுக்கு தமது பசியை ஆற்றிக்கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பமாக அது அமைந்தது.

மகன்மார்கள் கலைவாணியிடம் தவறாக நடக்க முற்பட்டார்கள். ஒருவர், இருவர் இல்லை பருத்த உடலமைப்பைக் கொண்ட 8 பேர் அவர்கள்.

அவர்களின் விருப்பத்தை தீர்ப்பதற்கு கொடூரமான முறையில் அவளை அணுகினார்கள். செம்மறி ஆடுகளுக்கு போடும் தடுப்பூசிகளை அவளுக்கு போட்டார்கள். பேரீச்சம் பழ விதைகளை சூடாக்கி மார்பகங்களை காயப்படுத்தினார்கள்.

அதன்விளைவாக அவள் மயக்கமடைய அவளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.

அவளின் மயக்கம் அவர்களுக்கு இன்பத்தை அளித்தது. மறுநாள் காலை கண் விழித்த போது அவள் அளவுக்கதிகமான குருதி வெளியேறிய நிலையில் அயலவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

வைத்தியசாலையில் இரண்டு மூன்று நாட்களின் பின்னர் கண் விழித்துப் பார்த்தபோது தன் உடல் முழுவதும் நக கீறல்கள், மார்பகங்களில் காயங்கள் இருப்பதையும், காலில் ஆணி உட்செலுத்தப்பட்டதால் கால்கள் செயலிழந்த நிலையில் இருந்ததையும் கண்டு அதிர்ந்து போனாள்.

அதை விட வைத்திய அறிக்கையின் படி அவள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டிருகின்றாள் என்பது உறுதியானதும் கலைவாணி துடி துடித்தால்;” ”ஏன் ஆண்டவரே, நான் உயிர் பிழைத்தேன். இதற்கு நான் செத்து தொலைந்து இருக்கலாமே, என்ட புருஷன் முகத்துல எப்படி முழிப்பேன்” என்று கதறி அழுதாள்.

உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டவளுக்கு அப்போது அங்கு பணிபுரிந்த சகோதர மொழி பேசும் இலங்கை தாதியொருவரின் உதவி கிடைத்தது. அவளின் ஆறுதலும் பராமரிப்பும் கலைவாணிக்கு பெரும் உதவியாக இருந்தது.

அதுமட்டுமின்றி வீட்டு எஜமானியும் பொலிஸாருக்கு பணம் கொடுத்து வழக்கை திசை திருப்பினாள். எனவே அங்கு நடைபெற்ற அநீதிக்கு நியாயம் கிடைக்கப் போவது இல்லை என்பது கலைவாணிக்கு புரிந்தது.

ஆனால் கலைவாணிக்கு தன் கணவரையும் பிள்ளைகளையும் ஒரு முறையாவது பார்க்க மாட்டேனா என்ற ஏக்கம் அதிகமாக இருந்தது. அதனால் அந்த தாதியின் உதவியுடன் ஒரு வழியாய் கலைவாணி இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் சக்கர நாற்காலியில் இலங்கை வந்தடைந்தாள்.

அவளை கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்த வெ.வே.பணியகத்தின் சணபியச பிரிவினர் பொறுப்பு ஏற்றுக்கொண்டதுடன், அவளிடமிருந்த ஒரு சில ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு கலைவாணியின் கணவரிடம் ஒப்படைத்தனர்.

அவர் கலைவாணியின் நிலை கண்டு மனம் உடைந்துப்போனார்.

தன் குடும்ப கஷ்டம் போக வெளிநாடு சென்றவளுக்கு இந்த நிலைமையா? என்று அவளை கட்டி பிடித்து அழுதான். அத்தனை கஷ்டங்களின் போதும் கணவரின் ஆறுதல் அவளுக்கு பெரும் ஆதரவாக இருந்தது.

அதனைதொடர்ந்து கலைவாணி இலங்கை வெளிநாட்டு தூதரகத்தில் பதிவுச்செய்து சென்றமையால் அவளுக்கு காப்புறுதி பணமாக 30 ஆயிரம் ரூபா பணம்கிடைத்ததாகவும் அது அவளுடைய மருத்துவ செலவுகளுக்கே போதுமானதாகவிருந்தாகவும் அவளை சந்தித்த போது கூறினாள்.

எனினும், தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாட்டை பதிவுசெய்தாள் எனினும், சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் வரை அந்த விசாரணைகள் இடம்பெற்றதுடன் மூன்றுவருட இறுதியில் இச்சம்பவம் தொடர்பாக தகுந்த ஆதாரங்கள் இல்லையென்ற காரணத்தினால் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகளினால் அது தொடர்பான விசாரணைகள் மூடப்பட்டன. அதுமட்டுமின்றி ஆண் அதிகாரியொருவரினால் அவளுடைய சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றமையால் கலைவாணியினால் அவளுக்கு நடந்த அநீதிதொடர்பாக எதையும் மனம் திறந்து கூறமுடியாமல் அசௌகரியங்களை சந்தித்தாள்.

அவளுடைய பிரச்சினைக்கு பொதுவாக ஒரு ஆண் அதிகாரியே இருந்தார். அவர் அவளிடம் கண்ணியமாகவும் ஒரு கடமை அதிகாரி போலவும் நடந்துகொள்ளவில்லை. அவளுக்கு நடந்த அநியாயங்களை ‘பச்சையாக’ சொல்லும்படி அவளிடம் கேட்டார். அது அவளை மேலும் மனரீதியாக துன்புறுத்துவதாக அமைந்தது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களையும், பாலியரீதியான கொடுமைகளையும் விசாரிப்பதற்கு பெண் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும். அப்போதுதான் அவ்விசாரணை அனுதாபத்துடனும் நேர்மையாகவும் நடைபெற முடியும். மரத்தால் விழுந்தவளை மாடேறி மிதிப்பது போல தமது காம விகாரங்களைத் தீர்த்துக்கொள்வதற்கு பயன்படும் வகையில் இத்தகைய விசாரணைகள் அமைந்துவிடக்கூடாது.

இறுதியாக கலைவாணிக்கு ஏற்பட்ட உடல் உளரீதியான பாதிப்புகளுக்காக அவளை வெளிநாட்டுக்கு அனுப்பிய ஏஜென்சியிடம் 15 ஆயிரம் ரூபாவை பெற்றுத்தருவதாக அந்த அதிகாரி உறுதியளித்தார். எனினும் இன்று வரை கலைவாணிக்கு அந்த பணமும் கிடைக்கவில்லை.

தோட்டத்தில் செய்துக்கொண்டிருந்த வேலையும் இல்லாமல் நாட் சம்பளத்துக்கே வேலைக்கு செல்கின்றாள். அதுவும் அவளுடைய உடலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவளால் அதிக நேரம் வெயில் நின்று வேலைசெய்ய முடிவதில்லையாம்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றாள் தலை நிமிரலாம் என்பது பொதுவான நிலைப்பாடு. ஆனால் அனைவருக்கும் அப்படி அமைவதில்லை என்பதற்கு கலைவாணி ஒரு உதாரணம்.

-யாழினி-