ராஜிதசேனரட்னவின் கருத்துக்கு சரியான சாட்டையடி!!

பத்திரிகை அறிக்கை

கடந்த 03ஆம் திகதி யாழ்.நகரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதார அமைச்சரும், அரசாங்கத்தின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, “போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், ஆதலால் போர்க்குற்ற விசாரணை நடாத்தத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழர்கள் பற்றியோ அல்லது தமிழர்களுக்கு வரலாறு நெடுகிலும் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றியோ கருத்திலெடுக்கத் தேவையில்லை என்ற சிங்கள பௌத்த பேரினவாத மனோநிலையில் அரசியல் செய்து வரும் மிகப் பெரும்பான்மையான சிங்களத் தலைவர்கள் மத்தியில், எதிர்நீச்சல் போட்டு தமிழர்களின் நலன்கள், உரிமைகள் பற்றி ஓரளவுக்கேனும் நியாயமாக சிந்தித்தும், செயலாற்றியும் வந்த அமைச்சர் ராஜிதவும்கூட பேரினவாத வெள்ளத்தில் அள்ளுண்டு அதன் போக்கில் செல்ல முடிவெடுத்ததையே அவரது கூற்று மிக தெளிவாக புலப்படுத்துகிறது.

அமைச்சரின் கூற்று, 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 இலக்க தீர்மானத்தை உதாசீனப்படுத்துவதாகவும், கடந்த மாதம் 23ஆம் திகதி ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட இரண்டு வருட கால அவகாசம் பற்றிய 34/1 இலக்க தீர்மானத்தை அவசியமற்றதாக்கியும் உள்ளது.

கடந்த அரசாங்கத்தை வீழ்த்தி புதிய அரசாங்கத்தை நல்லாட்சியின் பெயரில் அமைப்பதற்காக தமிழ் மக்கள் வழங்கிய பங்களிப்பிற்கு காரணமான விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரில் ஒருவராக அமைச்சர் ராஜித விளங்கியதையும் இங்கு நாம் சுட்டிக்காட்டவேண்டும். அமைச்சரவைப் பேச்சாளரான ராஜிதவின் நிலைப்பாடு, எமக்கு மிகத் தெளிவாக ஒரு விடயத்தை புலப்படுத்துகிறது.

அதாவது நல்லிணக்கத்தை கட்டியெழுப்பக்கூடிய அடித்தளமான, உண்மையைக் கண்டறிதலும், பொறுப்புக்கூறலும், நீதியையும் நிவாரணத்தையும் பெற்றுக் கொடுப்பதும் எக்காலத்திலும் எந்த சூழலிலும் உருவாக்கப்பட மாட்டாது என்பதே அது.

அனைத்துப் படைகளையும் மின்சாரக் கதிரையில் ஏற்றவேண்டும் என்று எக்காலத்திலும் தமிழ் மக்கள் கேட்டது கிடையாது. கடந்த அரசாங்கமே  மின்சாரக் கதிரைகள் பற்றிய கதைகளை அரசியலாக்கியது.

பொதுமக்கள் எனத் தெரிந்திருந்தும் கொத்துக் குண்டுகளை வீசி படுகொலை செய்ய உத்தரவிட்டவர்களையும், சரணடைந்தவர்களை சித்திரவதை செய்தும், வல்லுறவுக்குட்படுத்தியும் படுகொலை செய்தவர்களையும், உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்களை காணாமல் போகச் செய்ய உத்தரவிட்டவர்களையும் அடையாளம் காட்ட வேண்டும் என்றே தமிழ்மக்கள் நீதி கேட்கின்றனர். இத்தனை கொடுமைகளும் நடக்கவில்லை என்று ராஜித மறுப்பாரா?

பௌத்த அமைப்புகளாலும், சிங்கள தேசிய அமைப்புகளாலும் அதன் செல்வாக்கிற்குட்பட்ட, அல்லது அவ்வமைப்புகளின் தயவை நாடி நிற்கும் அரசியல்வாதிகளாலும் பேரினவாதமயப்படுத்தப்பட்டுள்ள சிங்கள சமூகத்தின் அடிப்படையான எண்ணங்களை மீறி எந்த அரசாங்கமும், அரசாங்கத் தலைமைகளும் செயற்படத் துணியாது என்பதன் மிகப் பிந்திய சாட்சியாக ராஜித காட்சியளிக்கின்றார்.

மேலும் புலிகளின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றி ராஜித தெரிவித்துள்ள கருத்து இறுதி யுத்தத்தின் காலத்திலிருந்து இன்றுவரை அரசாங்கம் செயற்படுத்தி வரும் அநீதியான, மனித நேயத்திற்கு எதிரான, நல்லிணக்கத்தில் நம்பிக்கை வைக்கமுடியாத நடைமுறைகளை மூடிமறைக்கும் ஒன்றாகவே அமைகின்றது.

இறுதி யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்ட ஏராளமான போராளிகளில் சுமார் 12,000 பேர் வரையானவர் மட்டுமே பாதுகாப்பு படைகளின் விசாரணை, சித்திரவதை, புனர்வாழ்வு என்ற படிமுறைகளுடாக சமூகத்துடன் இணைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இன்றுவரை அவர்கள் அனைவரினதும் நாளாந்த வாழ்க்கை படைகளின் புலனாய்வுத் துறையினரால் தீவிர கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டேயுள்ளது.

ஏனையோரில் பலர் எங்கேயென்று தெரியவில்லை. இனங்காணப்பட்டவர்களும், தடுப்புக்களில் உள்ளவர்களும் விசாரணைகள் எதுவுமின்றி விசாரணைகளுக்காகவும், தண்டனைகளுக்காகவும் காத்திருக்கின்றனர். இவர்களையெல்லாம் இன்றுவரை போர்க் குற்ற விசாரணைகளுக்காகவன்றி வேறெதற்காக அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை அமைச்சர்தான் தெரியப்படுத்த வேண்டும்.

உயிரோடுள்ள அனைத்து புலிப் போராளிகளுக்கும் நல்லிணக்கத்தின் பெயரால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தால்கூட  முன்னாள் போராளிகள் மீதான போர்க்குற்ற விசாரணை பற்றிய ராஜிதவின் மறைமுகமான பேரம்பேசலில் இருக்கக்கூடிய நியாயத்தை(?) சிந்திக்க சிலரேனும் தலைப்பிட்டிருப்பர்.

ஒரு சிறுபான்மை இனத்தின் மீதான பேரினவாத யுத்த நடவடிக்கைகளும், அதன் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இன அழிப்பு நடவடிக்கைகளும் இன்றுவரை கைவிடப்படாத ஒரு நிலையில், ராஜித போன்றவர்களும் கூட யுத்தக்குற்ற விசாரணைகளை நிராகரிக்கும் நிலைக்கு மாறியிருக்கும் சூழலில் தமிழர் தரப்பாக நாம் ஒன்றே ஒன்றைத்தான் செய்யமுடியும்.

அரசாங்கத்துக்கு ஐ.நா வழங்கிய கால அவகாசத்தின் பயனற்ற தன்மையை சர்வதேச சமூகத்துக்கு தெளிவுபடுத்துவதும், 2015 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாகவும் உடனடியாகவும் நடைமுறைப்படுத்தக்கூடிய அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்தின் மீது செலுத்த சர்வதேசத்தை தூண்டக்கூடிய அனைத்து விதமான செயற்பாடுகளையும் ஒரே திசையில் ஓரணியாக முன்னெடுப்பதே இன்று எம்முன்னே உள்ள பிரதான கடமையாகும்.

க.சிவநேசன் (பவன்)
மாகாணசபை உறுப்பினர்,
வட மாகாண சபை
05.04.2017.