என் வீட்டு அடுப்பில் உன் வீட்டுப் பானையா?: கேப்பாப்புலவு காணிக்கு பேரம் பேசும் படைத்தரப்பு!

கபளீகரம் செய்யப்பட்ட காணிகளை மீட்டெடுக்க பல்வேறு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டங்களே வாழ்க்கையாகிப் போனது. இருப்பினும் போராடியேனும் எமது உரிமைகளைப் பெற்றே ஆகவேண்டும். இல்லையெனில் எப்படியாவது தமிழ் மக்களைக் குட்டி விடலாம் என்ற எண்ணம் சிங்களப் பெரும்பான்மையிடம் தோன்றிவிடும்.

அவ்வாறான எண்ணங்களை அடியோடு அழிக்கவேண்டுமாயின் போராட்டங்களை சந்தித்துத் தான் ஆகவேண்டும்.

எத்தனை எத்தனை போராட்டங்கள்… தமிழர் வாழ்வில் ???

எமது சுய நிர்ணய உரிமைகளை பெற்று நிலைநாட்ட வேண்டுமாயின் போராடத்தான் வேண்டும். ஆனால் போராட்டம் என்பது தமிழர்களின் வாழ்வில் தொடர்கதையாகி விடுமா..?

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த தமது சொந்த இடங்களை மீட்டெடுத்து நிம்மதியான சுவாசக்காற்றை தமது இடங்களில் சுவாசிக்க விரும்பும் எம் இனம் படும் துயருக்கு அளவே இல்லாத நிலையே உள்ளது.

சொந்த இடங்களைத் தானே மக்கள் கோருகிறார்கள்..!! அடுத்தவர் நிலங்களைக் கோரவில்லையே.!!

இந்தநிலையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

கேப்பாப்புலவு படைத்தளத்தினுள் 150 கோடி ரூபாய் பெறுமதியான பாரிய உல்லாச விடுதியினை பாதுகாக்கும் நோக்கில் 138 குடும்பங்களின் காணிக்குப் பதிலாக பணத்தினை அள்ளி இறைப்பதற்கு இலங்கை படைத்தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு வாழ் 138 குடும்பங்களின் காணிக்குப் பதிலாக புதிய காணியும் பணமும் வழங்குவதான கோரிக்கை ஒன்றினை மக்களிடம் முன் வைப்பதற்கு படையினர் திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகளிடம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

142.5 ஏக்கர் நிலம் மக்களின் குடியிருப்பிற்கான அனுமதிப்பத்திரக் காணியாக உள்ள நிலையில், குறித்த பகுதியில் 760 ஏக்கர் நிலப்பரப்பினில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படையினர் சுவீகரித்து வைத்துள்ள காணிகளில் 760 ஏக்கரில் இருந்து 279 ஏக்கர் நிலத்தினை மட்டுமே விடுவிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த 279 ஏக்கர் நிலப்பரப்பும் வனப்பகுதியாகவே உள்ளது.

ஆக மக்களின் வாழ்விடப்பகுதியான குறித்த 142.5 ஏக்கர் நிலத்தின் சுமார் 30 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளடங்குகின்றது. இதனால் தம்மால் வழங்கப்படும் 279 ஏக்கர் நிலத்தினை மட்டும் ஏற்றுக்கொண்டு தமது பூர்வீக நிலத்தினை விடுவிக்க மக்களால் எழுத்தில் இணக்கம் வழங்கப்படுமாயின் பழைய நிலத்திற்கான பணமும் வழங்குவதாகவும் அந்த நிலங்களில் ஏற்கனவே வீடுகளுடன் வாழ்ந்த குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 14 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியிலான ஓர் புதிய வீட்டினை அமைத்துக் கொடுப்பதற்கும் இணங்குவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தக் கோரிக்கைக்கு மக்கள் இணக்கம் தெரிவிக்காத பட்சத்தில், மக்களின் சொந்த நிலமே வழங்குவதானால் அப்பகுதிக்குள் தம்மால் அமைக்கப்பட்டுள்ள இரு அடுக்குமாடி கட்டிடங்களை அகற்றவேண்டிய ஓர் நிலை ஏற்படுமென படையினர் தெரிவித்துள்ளனர்.

ஆக படையினரால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் இன்றைய சந்தைப் பெறுமதி 150 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

தமது சொந்த நிலங்களை மீட்பதற்காக இரவு பகலாக போராடும் மக்களிடம் பேரம் பேசும் முயற்சிக்கு அதிகாரிகளின் உதவியை தேடி ஓடுகிறது படைத்தரப்பு.

சுவீகரிக்கப்பட்ட காணிகளில் 8 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த படையினரால் அந்த நிலங்களை மீள ஒப்படைப்பதற்கு மனம் வரவில்லையெனில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலத்தினை எவ்வாறு விட்டுக்கொடுக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்..

– தெய்வேந்திரன்-

மக்களின் கேள்வி நியாயமானது தானே..!!