என் தேசத்தை நினைத்து..!!

தேசத்தை நினைத்து
மூச்சும் விடச்சுடுகிறது
ஊரை நினைத்து
உறக்கமும் தோன்றுதில்லை
காலாற நடந்த தெருக்கள்
கண்முன்னே விரிகிறது
கால்சட்டை கிழிந்தகோலம்
அது ஒரு ஆனந்தக்காலம்
வளையம் உருட்டி
மணல்வீடு கட்டி
மண்சோறு சமைத்தது
நினைவை விட்டுப்போகாது
எழுத ஆயிரம் இருக்கு–
எழுதும்போது விம்மல் எடுத்து
அழவேண்டும்போல கிடக்கு
கண்ணீர் வடிந்தோடுது
நாவறண்டு போகுது
நெஞ்சுக்குள் ஏதோ செய்யுது
என் மரணத்தின் சாம்பல்
என் ஊரில் கரையுமா?
கீரிமலைக்கடலில் சேருமா?
ஏக்கத்தால் என் வாழ்வு
தொலைந்து போகுது
சந்தோஷம் கரைந்து போகுது
என்மண்ணே என் ஊரே
எப்படி மறப்பேன் உன்னை
உன் புழுதிவாசம்
என் உயிரோடு கலந்தது

— ஈழத்தமிழ்விழி இந்திரன்-