தோனிக்கு எதிராக ஆந்திராவில் தொடரப்பட்ட வழக்கு ரத்து – உச்ச நீதிமன்றம்

ஹிந்துக் கடவுளான விஷ்ணு போல் வேடமிட்டதாக, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு எதிராக, ஆந்திராவில் தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, ஹிந்துக்கடவுள் விஷ்ணு போல் வேடமிட்டுள்ள படம், ஒரு இதழின் அட்டையில் வெளியிடப்பட்டது.

‘தோனியின் ஒரு கையில், ஷூ வைத்திருந்தது, ஹிந்து மதத்தினரை புண்படுத்துவது போல் அமைந்துள்ளது’ என, ஆந்திர மாநிலத்தில் அனந்தபூரில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், எம்.எம்.சந்தன கவுடா அடங்கிய அமர்வு, தோனி மற்றும் சம்பந்தப்பட்ட இதழுக்கு எதிரான இந்த வழக்கை, ரத்து செய்து நேற்று தீர்ப்பு அளித்தது.

டெல்லி நீதிமன்றம் மற்றும் கர்நாடகா நீதிமன்றங்களில் தொடரப்பட்டிருந்த இது தொடர்பான வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட், முன்பு தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.