அதிகாரிகள் , அரசியல்வாதிகளுக்காக வளைந்து கொடுக்காதீர்கள் – ராஜ்நாத் சிங்

அரசியல் எஜமானர்கள் தவறான உத்தரவு பிறப்பித்தால், அதற்கு அடிபணியாமல், தைரியமாக எதிர்த்து நிற்க வேண்டும்,” என, அரசு அதிகாரிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க, மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தலைநகர் டெல்லியில் குடிமைப் பணிகள் தினத்தையொட்டி, அரசு அதிகாரிகள் பங்கேற்ற விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதில், அரசு அதிகாரிகளின் பணி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்காக அதிகாரிகளை பாராட்டுகிறேன். மக்களுக்கு சேவை செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்கள் பொறுப்பை உணர்ந்து, பாரபட்சமின்றி செயல்படவேண்டும்; இதை, எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

சரியான, தைரியமான முடிவை, எந்தவித தயக்கமும் இன்றி, அதிகாரிகள் எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், அதிகாரிகளின் முடிவு எடுக்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டு விடும். உங்கள் அரசியல் எஜமானர்கள், உங்களுக்கு தவறாக உத்தரவு பிறப்பித்தால், அதை ஏற்க வேண்டாம்; விதிமுறைகளின்படிதான் செயல்படுவேன் என கூறுங்கள். தவறான உத்தரவின்படி, எந்த கோப்பிலும் கையெழுத்திட வேண்டாம்.

அரசியல் எஜமானர்களின் தவறான உத்தரவுக்கு ஆமாம் சாமி போட்டு, அடிபணியாமல் துணிச்சலாக செயல்படுங்கள்.முடிவு எடுப்பதில் தயக்கம் ஏற்பட்டால், சீனியர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கலாம். நம் நாட்டின் ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதற்கு, நிர்வாக முறை முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.