சாம்பியன்ஸ் டிராஃபியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வு

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகளை வைத்து சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜூன் மாதம் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளன.

ஐ.சி.சியுடன் நிதி விவகாரம் தொடர்பாக நிலவி வந்த பிரச்னையால் இந்திய அணி பங்கேற்பது பற்றி அறிவிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, கடந்த 8-ம் திகதி இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, ரஹானே, யுவராஜ் சிங், தோனி, கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, அஷ்வின், ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், மனிஷ் பாண்டே, பூம்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், காயம் காரணமாக மனிஷ் பாண்டே சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை பி.சி.சி.ஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.