அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 186 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இந்த வெற்றி மூலம் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட, 8 அணிகள் பங்கேற்றுள்ள 11வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன.

மேற்கு இந்திய தீவுகள், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன. இந்த நிலையில் எஞ்சிய ஒரு அரை இறுதி இடத்தை நிர்ணயிக்கும் முக்கிய ஆட்டத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து இந்தியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 109 ரன்கள் விளாசினர். 123 பந்துகளில் 11 பவுண்டரிகள் உதவியுடன் இந்த ரன்களை எடுத்தார்.

அதிரடியாக விளையாடிய வேதா 45 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் குவித்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் 60 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்து வீச்சில் சிக்கிய நியூசிலாந்து அணி திணறியது.

இறுதியில் அந்த அணி 25.3 ஓவரில் 79 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் 186 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் அட்டகாசமாக பந்துவீசிய ராஜேஸ்வரி காயக்வாட் 5 விக்கெட்டும், சர்மா 2 விக்கெட்டை சாய்த்தனர். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்குள் இந்தியா நுழைந்துள்ளது.