வேட்டி அணிந்து சென்றதால் இயக்குனருக்கு நேர்ந்த கதி!

வேட்டி அணிந்து சென்ற இயக்குனரை வணிக வளாகத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிரபல திரைப்பட இயக்குனரான அசிஷ் அவிகுந்தக் கொல்கத்தாவில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு நேற்று (15) நடிகை தேவலீனா சென்னுடன் சென்றார்.

அப்போது அவர் வேட்டி அணிந்திருந்தார். இதைப்பார்த்த வணிக வளாகத்தின் காவலாளிகள் அவரை மட்டும் நுழையவிடாமல் தடுத்துள்ளதாக தெரியவருகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக வேட்டி கட்டியவர்கள் இங்கே நுழைய அனுமதி கிடையாது என அவர்கள் கூறியதால், ஆத்திரம் அடைந்த இயக்குனர் அசிஷ் அவிகுந்தக் இந்த சம்பவம் பற்றி முகநூலில் கண்டனம் தெரிவித்து எழுதினார்.

அதில், “பேண்ட், சட்டை அணிபவர்கள் மட்டுமே தனியார் பொழுதுபோக்கு விடுதிகளுக்குள் அனுமதிக்கப்படும். ஆங்கிலேயர் கால கலாசாரம் இன்றும் இருப்பது தெரிந்த விஷயம்.

ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக வேட்டி அணிந்து சென்றால் வணிக வளாகத்துக்குள் அனுமதி கிடையாது என்பதை முதல்முறையாக இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

நல்லவேளையாக நான் ஆங்கிலத்தில் விவாதித்து என்னை யார் என்று அடையாளப்படுத்திக் கொண்டதால் வணிக வளாக நிர்வாகிகள் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

கொல்கத்தா இவ்வளவு மோசமாகிவிடும் என்று நினைக்கவில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.