சரித்திர சாதனை படைக்குமா ஜிம்பாப்வே?

ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

ஏற்கனவே, முடிவடைந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணி 3-2 எனத் தொடரைக் கைப்பற்றி சரித்திர சாதனைப் பெற்றது.

ஒருநாள் தொடரை முடிந்த பின்னர், தற்போது ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நேற்று முன்தினம் (ஜூலை 14-ந்தேதி) கொழும்பில் தொடங்கியது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி எர்வினின் (160) அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 356 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி  முதல் இன்னிங்சில் 346 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணியை விட இலங்கை 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. 10 ரன்கள் முன்னிலையுடன் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்கமே அந்த அணிக்கு பேரடியாக இருந்தது. 23 ரன்கள் எடுப்பதற்குள் ஜிம்பாப்வே அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

ஹெரத் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதனால் ஜிம்பாப்வே 100 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் 5-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸ் உடன் சிகந்தர் ரசா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்தது.

அணியின் ஸ்கோர் 59 ரன்னாக இருக்கும்போது வில்லியம்ஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து 6-வது விக்கெட்டுக்கு சிகந்தர் ரசாவுடன் பீட்டர் மூர் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. சிகந்தர் ரசா நம்பிக்கையுடன் விளையாட, மூர் அதற்கு துணையாக நின்றார்.

இருவரின் ஆட்டத்தால் ஜிம்பாப்வே 28.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. சிகந்தர் ரசா 62 பந்தில் அரைசதம் அடித்தார்.

அணியின் ஸ்கோர் 145 ரன்னாக இருக்கும்போது வில்லியம்ஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தது.

அடுத்து சிகந்தர் ரசாவுடன் மால்கம் வாலர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஹெரத்தின் பந்து வீச்சை திறமையாக எதிர்கொண்டது.

குறிப்பாக வாலர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இவரது அதிரடி ஆட்டத்தால் ஜிம்பாப்வே 200 ரன்னைத் தாண்டி வீறுநடை போட்டது.

வாலர் 54 பந்தில் அரைசதம் அடித்தார். சிகந்தர் ரசா சதத்தை நெருங்கி கொண்டிருந்தார்.

2-வது நாள் முடியும் நேரம் வந்ததால் வாலர் பொறுமையான ஆட்டத்தை கடைபிடித்தார்.

இருவரும் 3–வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட்டுக்கள் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

3-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது.

சிகந்தர் ரசா 97 ரன்னுடனும், வாலர் 57 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை ஜிம்பாப்வே 262 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய நான்காவது நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்து விளையாடினால் 350 ரன்களை தொட வாய்ப்புள்ளது.

அப்படி 350 ரன்கள் முன்னிலைப் பெற்றுவிட்டால் மற்றொரு சரித்திர சாதனைப் படைக்க அந்த அணி தயாராகிவிடும்.