பெடரர் வசமானது விம்பிள்டன் பட்டம்!

இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் 7-ம் நிலை வீரரான குரோஷியாவின் சிலிச்சும் மோதினர். இது பெடரர் பங்குபெறும் 11-வது விம்பிள்டன் இறுதி போட்டியாகும்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார்.

முதல் செட்டில் அடைந்த தோல்வியில் இருந்து சிலிச் மீள்வதற்குள் அதிரடியாக விளையாடிய பெடரர் அடுத்த இரண்டு செட்களையும் 6-1, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

இது பெடரர் வெல்லும் எட்டாவது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம் விம்பிள்டனை 8 முறை கைப்பற்றி ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அத்துடன் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமையையும் பெற்றுள்ளார்.