பெண் அரசியல்வாதி திருமணத்தில் முட்டை வீச்சு!

பிரேசில் நாட்டில் பெண் அரசியல்வாதி திருமணத்தில் முட்டைகளை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் மைக்கேல் டெமர் அதிபராக பதவி வகிக்கிறார்.

இவர் மீது ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு எதிராகவும், ஆதரவாளர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மைக்கேல் டெமர் அரசில் சுகாதார துறை மந்திரியாக பதவி வகிக்கும் ரிச்சர்ட் பாரோசின் மகள் மரியா விக்டோரியா பாரோசின் திருமணம் கரிதிபியாவில் நடந்தது.

அதில் டெமர் அரசில் இடம் பெற்றுள்ள 30-க்கும் மேற்பட்ட மந்திரிகள் அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதை அறிந்ததும் திருமணம் நடந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பு ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டு அதிபர் டெமருக்கும், அரசுக்கும் எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே திருமணம் முடிந்ததும் மணமக்கள் வெளியே வந்தனர்.

அவர்களை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் முட்டைகளை வீசி தாக்கினர்.

அப்போது அவர்கள் மீது முட்டைகள் விழாமல் குடைகளை விரித்து பாதுகாவலர்கள் தடுத்தனர். பின்னர் பத்திரமாக அவர்களை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதே போன்று திருமணத்துக்கு வந்த சிறப்பு விருந்தினர்களையும் அனுப்பிவைத்தனர்.

மணப்பெண் மரியா விக்மோரியா பாரோசும் அரசியல்வாதி ஆவார். இவர் பரானா மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவரது தாயார் சிடா போர்க்கைதி பரானா மாகாண துணை கவர்னராக பதவி வகிக்கிறார்.