வெற்றியின் ரகசியத்தை போட்டுடைத்தார் பெடரர்!

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதும், கௌரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா கடந்த இரண்டு வார காலமாக லண்டனில் நடந்து வந்தது. இதில் நேற்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது.

ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீரர் ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து) 6-ம் நிலை வீரர் மரின் சிலிச்சும் (குரோஷியா) மோதினர்.

இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் நேர் செட்டில் மரின் சிலிச்சை வீழ்த்தி 8-வது முறையாக மகுடம் சூடி வரலாறு படைத்தார்.

வெற்றி குறித்து ரோஜர் பெடரர் கூறியது,
‘இந்த விம்பிள்டன் தொடரில் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் கோப்பையை கையில் ஏந்தியிருப்பது உண்மையிலேயே மாயாஜாலம் போன்று உள்ளது.

இன்னும் இதை என்னால் நம்ப முடியவில்லை. கடந்த ஆண்டு அரைஇறுதியில் தோற்ற பிறகு விம்பிள்டனில் மீண்டும் ஒரு முறை இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிட்டுமா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது.

ஏனெனில் 2014, 2015-ம் ஆண்டு இறுதிப்போட்டிகளில் ஜோகோவிச்சிடம் (செர்பியா) தோற்று இருந்தேன். ஆனாலும் மீண்டும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருந்தது.

அதனால் தான் 8-வது முறையாக விம்பிள்டனை வென்று இங்கு நிற்கிறேன். இது ஒரு அற்புதமான நிகழ்வு’ என்று கூறினார்.