ஃபோர்ப்ஸ் டாப் 100! அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் இணைந்த விஜய், நயன்

பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள டாப் 100 அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் இணைந்துள்ளார்.

அத்துடன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ச்சியாக 3வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

2018ம் ஆண்டுக்கான 100 பேர் கொண்ட பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டி முதலிடத்தை பிடித்துள்ளார். தொடர்ச்சியாக சல்மான் கான் 3வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்து வருகிறார்.

சல்மான் கானை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ரூ.228.09 கோடி வருமானம் ஈட்டி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

ரூ.185 கோடியுடன் ‘2.0 நடிகர் அக்ஷய்குமார் 3வது இடத்தையும், ரூ.112.08 கோடி சம்பாதித்து 4வது இடத்தை தீபிகா படுகோனும் பிடித்துள்ளனர். அதிகம் சம்பளம் வாங்கும் முதல் 5 பாலிவுட் நடிகைகளில் தீபிகா படுகோன் முதலிடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த பிரியங்கா சோப்ரா வெறும் ரூ.18 கோடி சம்பாதித்து 49வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனி ரூ.101.77 கோடியுடன் 5வது இடத்திலும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ரூ.80 கோடியுடன் 9வது இடத்திலும் உள்ளனர்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 100 அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் கடந்த ஆண்டை காட்டிலும் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களின் எண்ணிக்கை 17ல் இருந்து 13ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் ரூ.66.75 கோடி வருமானம் ஈட்டி 11வது இடத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.50 கோடி வருமானத்துடன் 15வது இடத்திலும் உள்ளனர்.

இவர்கள் மட்டுமின்றி நடிகர்கள் விஜய், விக்ரம், பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர், மம்மூட்டி, மகேஷ் பாபு, விஜய் சேதுபதி, சூர்யா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் முதல் 50 இடங்களிலும், தனுஷ், அல்லு அர்ஜுன், ராம் சரண், விஜய் தேவரகொண்டா, கமல்ஹாசன் உள்ளிட்டோர் 100 பேர் கொண்ட பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரே நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரூ.15.7 கோடி வருமானத்துடன் 69வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ம் ஆண்டு அக்.ன் 1 முதல் 2018ம் ஆண்டு செப்.30 வரையிலான கால அடிப்படையில் இந்த பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியல் அந்தந்த நடிகர்களின் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களின் வசூல், விளம்பர படங்களின் மூலம் பெற்ற சம்பளத்தை பொருத்து அமைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.