அகதிகள் தொடர்பில் நியூசிலாந்தின் சலுகையை அதிரடியாக ஏற்றது அவுஸ்திரேலியா!!

அகதிகள் விடயத்தில் நியூசிலாந்தின் சலுகையை அவுஸ்திரேலியா உடனடியாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நீண்ட கால அடிப்படையில் இது சாத்தியமே என அவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலுள்ள 1250 அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் பணி நிறைவடைந்ததும் இது குறித்து நியூசிலாந்துடன் பேச்சு நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த ஒக்டோபர் 31ம் திகதி, பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியேற மறுத்து 400க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் இன்று 17வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை வருடமொன்றுக்கு தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை ஏற்றுக்கொள்ளத் தயார் என கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து அரசு அறிவித்திருந்தது.

இச்சலுகை இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், அவுஸ்திரேலியா இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நியூசிலாந்து பிரதமர் அவுஸ்திரேலியப் பிரதமரைச் சந்தித்தபோது தெரிவித்திருந்தார்.

ஆனால் ஏற்கனவே இந்த சலுகை மறுக்கப்பட்டதைப் போன்று இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என அவுஸ்திரேலியப் பிரதமர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் படகு மூலம் வந்தவர்களை நியூசிலாந்தில் குடியமர்த்தினால் ஆட்கடத்தல்காரர்கள் தமது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அது வழிகோலும் எனவும் தமது முடிவினை நியாயப்படுத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே அகதிகள் விடயத்தில் நியூசிலாந்தின் சலுகை குறித்து அவுஸ்திரேலியப் பிரதமர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.