அதிரடி வெற்றி மூலம் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டீ-20 போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

7 விக்கெட்டுகளால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கடந்த போட்டியில் நியூசிலாந்து அணியிடம் பெற்ற தோல்விக்கு, இந்தியா அணி பதிலடி கொடுத்துள்ளது.

ஒக்லாந்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக கொலின் டி கிராண்ட்ஹோம் 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் குர்னல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அஹமட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, 159 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இந்தியா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டீ 20 தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக அணியின் தலைவர் ரோஹித் சர்மா 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இப் போட்டியின் போது அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, டீ20 போட்டிகளில் 50 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை அடித்த வீரர்களின் பட்டியலில், விராட் கோஹ்லியை முந்தினார். ரோஹித் சர்மா 20இற்கும் மேற்பட்ட முறைகள் 50 இற்கும் மேற்பட்ட ஓட்டங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டீ-20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர், அதிக பவுண்ரிகள் அடித்த வீரர், அதிக இணைப்பாட்ட ஓட்டங்கள் பெற்ற வீரர் என பல சாதனைகளை இன்றைய தினம் ரோஹித் சர்மா பதிவு செய்தார்.

அவர், டீ-20 போட்டிகளில் 2288 ஓட்டங்களை குவித்துள்ளார். ஷிகர் தாவானுடன் இணைந்து 1480 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக அடித்துள்ளார்.

மேலும் இன்றைய தினம், 100ஆவது சிக்ஸரையும் ரோஹித் சர்மா அடித்தார். இந்த பட்டியலில் 103 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் மற்றும் மார்டின் கப்டில் ஆகியோர் முதலாவது இடத்தில் உள்ளனர்.

இப்போட்டியில் பந்து வீச்சில் லொக்கி பெர்குசன், இஷ் சோதி மற்றும் டேர்ல் மிட்செல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதேவேளை, நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளரான இஷ் சோதி, இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமை பெற்றார். அவர் இந்தியாவுக்கு எதிராக 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய குர்னல் பாண்ட்யா, தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான டீ-20 போட்டி, நாளை மறு தினம் ஹமில்டனில் நடைபெறவுள்ளது.