அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது ஏன்?

இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்கவும், உறவை சகஜ நிலைக்கு கொண்டுவரவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கையாளும் உத்திகளின் ஒரு பகுதியாகவே இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவிக்கும் அவரது நடவடிக்கை அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

அதற்கு இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது.

அதில் இருந்த விமானப்படை விமானி அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அபிநந்தனை விடுவிக்கும் முடிவை அறிவித்தபோது இம்ரான்கான் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை, தாம் அழுத்தத்துக்கு ஆளானதாகவும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்திய பாகிஸ்தான் உறவில் பதற்றம் தணிவதற்கான நேர்மறையான அறிகுறிகள் தெரிவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவுதி வெளியுறவு அமைச்சர் திட்டமிடப்படாத முறையில் பாகிஸ்தானுக்கு திடீரென பறந்து சென்றார். இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்த விவகாரத்தில் ஏதோ ஒருவகையில் சர்வதேச சக்திகள் ஈடுபட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன என ஆர்வலர்கள் சுட்டுகின்றனர்.

இந்தியா தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கையாளும் அணுகுமுறையை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இம்ரான் கானுக்கு உண்மையான அதிகாரம் இல்லை. ராணுவத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவரே அவர் என்பது போன்ற பிம்பத்தை இந்திய ஊடகங்கள் உருவாக்கி இருந்தன.

இந்நிலையில் தம்மை ஓர் அரசியல் தலைவராகவும், உண்மையில் பாகிஸ்தானின் விவகாரங்களை கட்டுப்படுத்துகிறவராகவும் நிரூபிக்க அவர் முயற்சி செய்தார்.

அத்தோடு ராணுவத் தலைமையினால் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விடுதலை மூலம் இருநாட்டு உறவில் உள்ள பெரும் பதற்றம் குறைவாக இருக்கும் என அவதானிகள் சுட்டியுள்ளனர்.