அவுஸ்திரேலியப் பிரதமருக்கு 3 கால்களா? அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்

அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிசன், அவருடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகைப்படத்தை கவனித்தால் அவருக்கு 3 கால்கள் உள்ளது போன்று காணப்படும். எனினும் கூர்ந்து மொரிசனுக்கு இரு இடது கால்கள் உள்ளது தெரியும்.

தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள வேளையில், அந்தப் படத்தை அவுஸ்திரேலியப் பிரதமரின் அலுவலகம் அவருடைய சொந்த இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்தது.

மொரிசனின் அழுக்கான காலணிகளை மாற்றி நிழற்படத்தைச் சீர்செய்ய அவருடைய அலுவலகம் எடுத்த முயற்சி அவுஸ்திரேலியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பல இணையவாசிகளை நகைக்க வைத்தது.

Photoshop மென்பொருளைப் பயன்படுத்திய ஊழியர்கள், இறுதியில் பிரதமருக்கு இரு இடது கால்கள் இருப்பது போல் படத்தைத் தவறுதலாகத் திருத்தியுள்ளனர்.

ஆனால், படத்திற்கு வந்த வேடிக்கையான கருத்துகளை மொரிசன் பெரிதுபடுத்தவில்லை.

படத்தில் காலணிகளைத் திருத்தாமல், தம் தலையில் இருந்த சொட்டையைத் திருத்தியிருக்கலாம் என்று அவர் Twitter-இல் வேடிக்கையான ஒரு பதிவைப் பகிர்ந்துகொண்டார்.