அவுஸ்திரேலியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! 40 ஆயிரம் பேர் பாதிப்பு – 87 பேர் உயிரிழப்பு

அவுஸ்திரேலியா முழுவதும் பரவலடைந்துவரும் flu – கொடிய வைரஸ் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட சுமார் நாற்பதாயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய மருத்துவ வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளன.

அனைத்து மாநிலங்களிலும் சேகரிப்பட்டுள்ள தகவல்களின்படி இவ்வருட வைரஸ் காய்ச்சலினால் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருட வைரஸ் காய்ச்சல் சுமார் நாலாயிரம் பேரை பலியெடுக்கப்போவதாக மருத்துவ வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், இந்தக்காய்ச்சலின் தாக்கம் மாநிலங்கள் ரீதியாக வேகமாக பரவிவருவதாக மருத்துவ வட்டாரங்களினால் தொடர்ந்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் விக்டோரியாவில் மூன்று குழந்தைகளும் 23 வயோதிபர்களும் உயிரிழந்துள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒன்பது முதியோர்கள் இந்தக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.

குயின்ஸ்லாந்தில் 25 பேரும் தெற்கு அவுஸ்திரேலியாவில் 27 பேரும் இந்த வைரஸ் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களிடமிருந்து தொற்றுக்களை தவிர்ப்பதற்கு பல வழிமுறைகள் கூறப்பட்டுவருகின்றது.

இருந்த போதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் இயன்றளவுக்கு உறுதியான தடுப்புமுறை என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.