அவுஸ்திரேலியாவில் அப்பாவி அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபமான நிலைமை!

அவுஸ்திரேலியாவிலிருந்து பங்களாதேஷ் செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த ரோஹிங்யா அகதிகள் பலரிடம் விசா மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்பரா தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடி குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பங்களாதேஷ் செல்வதற்காக கன்பராவிலுள்ள பங்களாதேஷ் தூதரகத்தில் விசா விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா விசா விண்ணப்பங்களிலேயே இவ்வாறான பெரும் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விசா விண்ணப்பிக்கும் முறையில் காணப்படுகின்ற குழப்பமான படிமுறைகளினாலும் மொழிப்பிரச்சினையாலும் மூன்றாம் நபரை நாடவேண்டிய கட்டாயத்துக்குள்ளான அப்பாவி ரோஹிங்யா அகதிகள் தள்ளப்படுகின்றனர்.

இதனால் அவர்கள் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த மோசடியினால் பாதிக்கப்பட்ட சுமார் 20 ரோஹிங்யா அகதிகள் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாடுகளின் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கடந்த கிறிஸ்மஸ் விடுமுறை காலப்பகுதியில் பங்களாதேஷிற்கு ரோஹிங்யா அகதிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அந்நாட்டு விமானநிலைய அதிகாரிகள் போலி விசாவைக் கண்டுபிடித்து விசாரணை செய்தபோது இவ்விடயம் அம்பலமானது என்றும் கன்பராவிலுள்ள பங்களாதேஷ் தூதரகத்திலுள்ள உத்தியோகத்தர் ஒருவரின் ஊடாகவே இந்த விசா மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ் பொலிஸாரும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் தமது தூதரக அதிகாரிகள் எவரும் மோசடிச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று இப்போதைக்கு திட்டவட்டமாக கூறமுடியாது என்று கன்பராவிலுள்ள பங்களாதேஷ் தூதுவர் தெரிவித்துள்ளார்.