அவுஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

அதற்கமைய இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய முதல் இன்னிங்ஸ்சை தொடங்கியுள்ள அவுஸ்திரேலியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்போது, ஆட்டநேர முடிவில் மார்க்கஸ் ஹரிஸ் 19 ஓட்டங்களுடனும், உஸ்மான கவாஜா 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன்படி, இந்தியா அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில் அவுஸ்திரேலியா அணி, 598 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

சிட்னி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இந்தியா அணி, முதல் விக்கெட்டை 10 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை இழந்தது. கே.எல். ராகுல் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்த களமிறங்கிய புஜாரா, மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மாயங்க் அகர்வாலும் ஜோடி சேர்ந்து அணிக்காக சிறந்ததொரு இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து, 116 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதன்போது மாயங்க் அகர்வால் 77 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்தாக அணித்தலைவர் விராட் கோஹ்லி களம் புகுந்தார்.

சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்ட கோஹ்லி 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதன்பிறகு களமிறங்கிய ரஹானேவும் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய விஹாரி களத்தில் நங்கூரமிட, மறுபுறம் துடுப்பெடுத்தாடிய புஜாரா ஆகிய இருவரும் இணைந்து அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை திறம்பட சமாளித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க, முதல் நாள் ஆட்டத்துக்காக இந்தியா அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ஓட்டங்களை பெற்றது.

இதனைதொடர்ந்து இன்றைய தினம் இரண்டாவது நாளை தொடங்கிய இந்தியா அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் களத்தில் இருந்த ஹனுமா விஹாரி 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, புஜாரா 193 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். மற்றொரு வீரரான ஜடேஜா 81 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்காது ரிஷப்பந்த் 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில், நாதன் லியோன் 4 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 10 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில் அவுஸ்திரேலியா அணி, நாளை போட்டியின் மூன்றாவது நாளை ஆரம்பிக்கவுள்ளது.