அவுஸ்திரேலியாவில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட இலங்கை குடும்பம்!!

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வசித்துவந்த தமிழ்க் குடும்பம் ஒன்று தமது வீட்டிலிருந்து அதிகாலை நேரம் ‘முன்னெச்சரிக்கை ஏதுமின்றி தடுப்பு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகலிடம் கோரியிருந்த தம்பதியினர் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு குழந்தைகளும் மெல்போர்னில் உள்ள Broadmeadows தடுப்பு முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த தகவலினை Tamil Refugee Council (TRC) அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய எல்லை படை அதிகாரிகள், மற்றும் காவல்துறையினர் கடந்த வாரம் அதிகாலை மத்திய QLD யிலுள்ள ஈழத்தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த ஈழத் தமிழர்களான நடேசலிங்கம், பிரியா, தம்பதியினரின் 2 வயது மற்றும் 9 மாதக் குழந்தைகளையும் காவலில் எடுத்து பின்னர் மெல்போர்னில் உள்ள Broadmeadows தடுப்பு முகாமில் கொண்டுசென்று விட்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் Biloela வில் வாழ்ந்து வந்துள்ளனர். அத்துடன் Biloela இறைச்சி தொழிற்சாலையில் நடேசலிங்கம் பணியாற்றிவந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னறிவிப்பு ஏதுமின்றி சென்ற உத்தியோகத்தர்கள், அவர்களை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து வெளியேற்றியதாக தெரிகிறது.

கணவன் ஒரு வாகனத்திலும், மனைவி குழந்தைகளை பிறிதொரு வாகனத்திலும் அதிலும் குழந்தைகளையும் தாயையும் வெவ்வேறாகப் பிரித்தே கொண்டுசென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை புகலிடம் கோரிய குறித்த தம்பதியினரின் Bridging Visa கடந்த தை – மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்தமையே இந்நடவடிக்கைக்கு பிரதான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.