ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை; இது வெட்ககேடானது!

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் தளர்த்தப்பட வேண்டும். படையினர் வெளியேற்றப்பட வேண்டும் என கோஷமிட்ட போராட்டம் நடத்திய எங்களால் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கவும், தளபாடங்களை பெற்றுக் கொடுக்கவும் இயலவில்லை. இதுவொரு வெட்ககேடான விடயம் மட்டுமல்ல பாரிய குற்றமுமாகும்.

மேற்கண்டவாறு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடமாகாணசபையின் 118வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தளபாடங்கள் இல்லாமை தொடர்பாக விசேட கவனயீர்ப்பு ஒன்றை கொண்டுவந்து உரையாற்றும் போதே கஜதீபன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

உயர்பாதுகாப்பு வலயங்கள் தளர்த்தப்பட வேண்டும். படையினர் வெளியேற்றப்பட வேண்டும்.

பாடசாலைகள், ஆலயங்கள் மக்களிடம் கொடுக்கப்பட வேண்டும். என தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியவர்கள் நாங்கள்.

அதன் பயனாக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த 16 பாடசாலைகளில் 8 பாடசாலைகள் இந்த ஆட்சிக்காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.

அந்த பாடசாலைகளுக்கு அண்மையில் சென்றிருந்த போது 3 பாடசாலைகளில் தலா 1 அதிபர்கள் மட்டும் கடமையில் உள்ளார்கள்.

அதில் 2 பாடசாலைகளின் அதிபர்கள் வலயத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் பாடசாலையில் தாங்கள் நினைத்தால் போல் விளையாடி கொண்டு நிற்கிறார்கள்.

ஒரு பாடசாலையில் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அங்கே ஒரு பெண் வந்தார்.

அந்த பெண் தன்னை ஒரு தொண்டர் ஆசிரியர் என அடையாளப்படுத்தினார்.

புதிதாக தொண்டர் ஆசிரியர்களை பாடசாலைகளில் சேர்ப்பதில்லை என நாங்கள் தீர்மானித்திருக்கும் நிலையில் எப்படி புதிதாக தொண்டர் ஆசிரியர் ஒருவர் அந்த பாடசாலையில் நிற்க முடியும். ஆகமொத்தத்தில் 3 பாடசாலைகளில் ஆசிரியர்கள் எவரும் இல்லை.

விடுவிக்கப்பட்ட 8 பாடசாலைகளிலும் தளபாடங்கள் இல்லை. நாங்கள் தான் உயர்பாதுகாப்பு வலயத்தை தளர்த்து, படையினரே வெளியேறு என போராட்டம் நடத்தியவர்கள்.

நாங்கள் தான் கோஷங்களை போட்டவர்கள். அதே நாங்கள் தான் விடுவிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஒரு வசதியை கூட செய்யவில்லை.

இது வெட்ககேடான விடயம். அதுபோக எங்களால் செய்யகூடிய விடயங்களை கூட நாங்கள் செய்யாமல் இருப்பது பாரிய குற்றமுமாகும்.

வலிகாமம் வலயத்தில் பல பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை இந்த பாடசாலைகளுக்கு நியமியுங்கள்.

அவர்கள் மாணவர்களுக்கு கல்வியை போதிக்கா விட்டாலும் பரவாயில்லை. மாணவர்களுக்கு பாதுகாப்பாக என்றாலும் இருக்கட்டும்.

அதேபோல் நடேஸ்வரா கல்லூரி விடுவிக்கப்பட்டுள்ளபோதும் பாடசாலைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றையும், பாடசாலை கிணற்றையும் பொலிஸார் தொடர்ந்தும் தங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

அந்த விடயம் தொடர்பாகவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

யாழருவி நிருபர் எஸ்.நிதர்ஷன்