ஆசிரியர் உதவியாளர்களின் கோரிக்கைகள் தாங்கிய 3000 கடிதங்கள் அரசாங்கத்திற்கு அனுப்பிவைப்பு..!

மலையகத்தில் ஆசிரியர் பற்றாக் குறையை நிவர்த்திப்பதற்காக உயர்தரம் கல்வித் தகைமைக்கொண்ட 3000பேருக்கு பெருந்தோட்ட தோட்டப் பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் வழங்கி உள்ளீர்க்கப்பட்டனர்.

மலையக தோட்டப்புறங்களில் குறைந்த வசதிகளுடன் சேவையாற்றும் மேற்படி ஆசிரிய உதவியாளர்களுக்கு முதலில் 6000 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 10000 ரூபாவும் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று வாழ்க்கை செலவுகள் அதிகரித்த வேளையில் வழங்கப்பட்டு வரும் அந்த பத்தாயிரம் ரூபாவும் அவர்களின் வாழ்க்கை செலவுகளுக்கு போதுமானது அல்ல.

நியமனம் வழங்கப்பட்ட திகதியில் இருந்து இன்றுவரை இந்நியமனத்தை பெற்றுக்கொண்ட மலையக இளைஞர், யுவதிகள் தமது வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் ஒரு பகுதியினர் தற்பொழுது ஆசிரியப் பயிற்சிக்காக கோப்பாய், மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை, கொட்டக்கலை ஆகிய இடங்களில் உள்ள ஆசிரியக் கலாசாலைகளில் பயிற்சியை பெற்றுவருகின்றனர்.

இன்னும் ஏராளமானோர் தமக்கு நியமனம் வழங்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரிய பயிற்சி கலாசாலைகளுக்கு உள்ளீர்கப்படாமல் உதவி ஆசிரியராக பணிப்புரிந்து வருகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்களில் இந்நியமனமே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானதும், அநீதிக்கு உட்பட்ட நியமனமாகவும் இருந்தது.உயர்தரம் கல்வித் தகைமைக்கொண்டோரை இலங்கை ஆசிரிய சேவை தரம் 3-11 க்கு உள்ளீர்க்க முடியும்.

இருந்தபோதிலும் அவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து, தற்போதைய வாழ்க்கை செலவுகளையும் கருத்தில் கொள்ளாது மிகவும் குறைந்த சம்பளத்திற்கு நியமனம் வழங்கப்பட்டமை குறித்து அவ்வப்போது கருத்துவாதங்களும் கோரிக்கைகளும் எழுந்தபோதிலும் இதுவரை எந்த முடிவுகளும் எட்டப்பட்டதாக இல்லை.

இலங்கை ஆசிரிய சேவை சங்கமும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சைக்கு இவர்களை இ.ஆ.சே. 3-11க்கு தரம் உயர்தப்படவேண்டும் என அவசர கடிதமொன்றினையும் அனுப்பியிருந்தது.

இருப்பினும் அதற்கும் எந்தவிதமான சாதனகமாக பதில்களும் இதுவரை கிடைக்கவில்லை.

மேற்படி இவ்விடயம் தொடர்பாக தீர்மானமொன்றினை பெற்றுக்கொள்ளுமுகமாக இவ் உதவி ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றினைந்து உதவி ஆசிரியர் சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி, இவ் அமைப்பின் ஊடாக தமது பிரச்சினைகளை நேரடியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனிடம் எடுத்துரைப்பதற்காக சென்றுள்ளனர்.

அதன்போது அவர்கள் நியமனம் பெற்ற நாளில் இருந்து இன்றுவரை எதிர்கொள்கின்ற அனைத்து பிரச்சினைகளும் கல்வி இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இருந்தபோதிலும் அங்குசென்றவர்களுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இந்நியமனம் கடந்த அரசாங்கத்தில் வழங்கப்பட்டதாகவும், அதில் வர்த்தமானி சிக்கல் இருப்பதாகவும் சாக்குபோக்கு தெரிவித்தாரே ஒழிய தமக்கு நியாயமான தீர்ப்பினை பெற்றுத்தருவாதாக உறுதியளிக்கப்படவில்லை எனவும் கவலை தெரிவித்தனர்.

ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டபோது சிங்களமொழியிலான பிரிவெனா ஆசிரியர்களுக்கும் உதவியாளர் நியமனமே வழங்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது அவ்பிரிவெனா உதவி ஆசிரியர்கள் பெரும்பான்மை அரசியல்வாதிளால் அமைச்சரவை அங்கிகாரம் பெற்று அவர்களுக்கு இ.ஆ.சே. 3-11க்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

ஆனால் ஒரே நியமனத்தில் வழங்கப்பட்ட பெரும்பாண்மை பிள்ளைகளுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளபோது தமிழ்மொழியிலான இளைஞர், யுவதிகளுக்கும் மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே இப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு பெற்றுக்கொள்ளுமுகமாக பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்கள் 3000பேரும் இப்பிரச்சினையை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாக தமது கோரிக்கைகள் தாங்கிய 3000 கடிதங்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தமது பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுச்சென்று தீர்த்து வைப்பார்கள் என மலைப்போல் தமிழ்முற்போக்கு கூட்டணியை நம்பியிருந்ததாகவும் ஆனால் அமைச்சரவை அந்தஸ்து பெற்று பழனி திகாம்பரம்,

மனோகனேசன் போன்றோர் இதுதொடர்பாக வாய்திறக்காது இருப்பதும் தமக்கு நம்பிக்கை இழக்க்கப்பட்டதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சரும் தமக்கு தற்போது அதிகாரம் இல்லயென கூறிவரும் வேளையில் தமது பிரச்சினைகளை தாமே தீர்க்கப் முயற்சிசெய்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் தெரிவிக்கின்றனர்.

அவிசாவளை நிருபர் ரா.கமல்