ஆஸி அணிக்கெதிரான டெஸ்ட்! வலுவான நிலையில் இந்தியா

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

சிட்னி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்போது, ஆட்டநேர முடிவில் புஜாரா 130 ஓட்டங்களுடனும், ஹனுமா விஹாரி 39 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன்படி களமிறங்கிய இந்தியா அணி, முதல் விக்கெட்டை 10 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை இழந்தது.

கே.எல். ராகுல் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்த களமிறங்கிய புஜாரா, மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மாயங்க் அகர்வாலும் ஜோடி சேர்ந்து அணிக்காக சிறந்ததொரு இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து, 116 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.

இதன்போது மாயங்க் அகர்வால் 77 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்தாக அணித்தலைவர் விராட் கோஹ்லி களம் புகுந்தார்.

சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்ட கோஹ்லி 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதன்பிறகு களமிறங்கிய ரஹானேவும் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய விஹாரி களத்தில் நங்கூரமிட, மறுபுறம் துடுப்பெடுத்தாடிய புஜாரா ஆகிய இருவரும் இணைந்து அவுஸ்திரேலியா பந்து வீச்சாளர்களை திறம்பட சமாளித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.

இதற்கமைய இவர்கள் இருவரும் இணைந்து இன்றைய ஆட்டநேர முடிவு வரை 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தனர்.

பந்து வீச்சில் ஜோஸ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக், நாதன் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில் இந்தியா அணி, நாளை போட்டியின் இரண்டாவது நாளை ஆரம்பிக்கவுள்ளது.