இந்தியாவில் பயிற்சி பெறும் புலிகள்: வடக்கில் தாக்குதல்களை நடத்த திட்டம்! சிங்கள ஊடகத்தின் பகீர் தகவல்

புலிப் போராளிகள் தென் இந்தியாவில் பயிற்சி பெற்று வரும் நிலையில் வடக்கில் மீளவும் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெற்கிலிருந்து வெளியாகும் வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தென் இந்தியாவின் பயற்சி முகாம்களில் 25 இற்கும் மேற்பட்ட புலியினர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த ஆண்டில் இலங்கைக்கு திரும்பி வடக்கை மையமாகக் கொண்டு 4 பாரிய தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் நோக்கிலான பிரச்சார உத்தியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், தெல்லிப்பளை, கிளிநொச்சி, வட்டுக்கோட்டை, நெடுங்கேணி, போன்ற பல்வேறு இடங்களை சேர்ந்த 17 முதல் 25 வயது வரையிலான பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியாவில் சிங்கள மக்களை இலக்கு வைத்து தாக்குதல் ஒன்றை நடத்தவும், மடு இராணுவ முகாமின் படையினர் மீது தாக்குதல் நடத்தவும்,

புலம்பெயர் சமூகத்தின் தேவைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவும்,

வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் தென் இந்தியாவில் பயிற்சி பெற்று வரும் புலி உறுப்பினர்களை, ரங்கன் மற்றும் இன்பன் ஆகிய இரண்டு முன்னாள் புலித் தலைவர்கள் வழிநடத்தி வருவதாகவும் அதேவேளை இருவரும் இறுதிக் கட்ட போரின் போது இந்தியாவிற்கு தப்பி சென்று அங்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி இந்தியாவிலிருந்து படகு மூலம் வந்த 4 இளைஞர்களை கைது செய்த கடற்படையினர் அவர்களை காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து படையினர், கடற்படை, பயங்கரவாத விசாரணைப் பிரிவு என்பன விசாரணை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இருப்பினும் அந்தந்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இதனால் பல்வேறுபட்ட உண்மை தன்மைகளை கண்டறிய முடியாத நிலைமை உருவாகியுள்ளது என இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்த தகவல்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சோ, படைத்தரப்போ எவ்வித தகவல்களையும் உத்தியோகப்பூர்வமாக வெளியிடவில்லை.

இவ்வாறான செய்திகளினால் மக்கள் மனதில் ஒருவித அச்ச உணர்வு ஏற்படும் நிலையே உள்ளது என்கின்றனர் பலர்.

உத்தியோகப்பூர்வமற்ற செய்தியாக இச்செய்தி இருப்பினும் மீண்டுமொரு தாக்குதல்களை எதிர்கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை என்றே கூறலாம்.

அத்தோடு புலிகள் இந்தியாவில் தான் பயிற்சி பெற வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது என்கின்றனர் அவதானிகள்.