இந்திய அணிக்கு எதிரான முதலாவது போட்டி! நியூஸிலாந்து அபார வெற்றி

இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது.

80 ஓட்டங்களினால் நியூஸிலாந்து அணி அபார வெற்றியீட்டியுள்ளது.

நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது நியூஸிலாந்து அணியுடன் ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 4:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில், இவ் விரு அணிகளுக்கிடையேயான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று வெலிங்டனில் பிற்பகல் 12.30 க்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் முதலாவதாக களமிறங்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அதிரடியாக விளையாடி 6 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை குவித்தது.

220 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியமையினால் இந்திய அணி 10 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 77 ஓட்டங்களை பெற்றது.

அதன்படி ரோகித் சர்மா ஒரு ஓட்டத்துடனும், தவான் 29 ஓட்டத்துடனும், விஜய் சங்கர் 27 ஓட்டத்துடனும், ரிஷாத் பந்த் 4 ஓட்டத்துடனும், தினேஷ் கார்த்திக் 5 ஓட்டத்துடனும், பாண்டியா 4 ஓட்டத்துடனும் முறையே ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந் நிலையில் 7 ஆவது விக்கெட்டுக்காக தோனி மற்றும் குருனல் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்தாடி சரிவிலிருந்த இந்திய அணியை மீட்கப் போராடினார்.

இவர்கள் இருவரும் சற்று மைதானத்தில் அதிரடி காட்ட இந்திய அணி 14.3 ஓவர்களுக்கு 103 ஓட்டங்களை பெற்றது. குருனல் பாண்டியா 12 ஓட்டத்துடனும், தோனி 17 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

எனினும் 16 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் குருனல் பாண்டியா 20 ஓட்டத்துடன் டீம் சவுதியின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அவரையடுத்து ஆடுகளம் புகுந்த புவனேஸ்வர் குமாரும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இவரின் வெளியேற்றத்தையடுத்து சாஹல் களம் நுழைய தோனி 18 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 39 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க இறுதி விக்கெட்டுக்காக கலில் அஹமட் ஆட்டமிழக்க மறுமுணையில் சஹால் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 80 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் நியூஸிலாந்து அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் டீம் சவுதி 3 விக்கெட்டுக்களையும், லொகி பெர்க்ஸன், மிச்செல் சாண்டர், சோதி ஆகியோர் தலா விக்கெட்டுக்களையும், மிச்செல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இவ் விரு அணிகளுக்கிடையேயான இரண்வது இருபதுக்கு 20 போடடி எதிர்வரும் 8 ஆம் திகதி அக்லெண்டில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.