இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை?

இராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ஐ.சி.சி.யிடம் வலியுறுத்தியுள்ளது.

ராஞ்சியில் நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ஓட்டத்தினால் தோல்வியடைந்திருந்தது.

இப் போட்டியில் இராணுவ தொப்பி அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாடினார்கள்.

காஷ்மீரில் உள்ள புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் இராணுவ தொப்பி அணிந்து விளையாடினார்கள்.

இராணுவத்தில் கெளரவ பொறுப்பு வகிக்கும் தோனியின் யோசனையின் பேரில் இந்த ஆட்டத்தை இராணுவ வீரர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொண்டனர்.

அத்துடன் இராணுவ தொப்பி அணிந்து மிடுக்குடன் இந்திய கேப்டன் விராட் கோலி, வலம் வந்தார்.

மேலும்‘இந்த ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் போட்டி கட்டணத்தை, நாங்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குகிறோம். இதே போல் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி வழங்க வேண்டும்” என்று கோலி வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், இராணுவ தொப்பி அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.