இமாலய சாதனை படைத்த ரவுடி பேபி!!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’.

யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும் சர்வதேச பில்போர்ட் இசைப் பட்டியலிலும் இடம்பெற்று சாதனை புரிந்தது.

தமிழ் சினிமாவில் அதிக பார்வையாளர்கள் கொண்ட பாடலாக ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் இருந்து வந்தது. இதுவும் ‘3’ படத்துக்காக தனுஷ்-அனிருத் கூட்டணி இணைந்து உருவாக்கியது.

ந்த பாடல் தற்போது வரை சுமார் 175 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த சாதனையை ‘ரவுடி பேபி’ வீடியோ பாடல் உடைத்துள்ளது.

தற்போது 183 மில்லியன் பார்வைகளோடு, தென்னிந்திய திரையுலகில் அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட யூடியூப் வீடியோ என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் ‘பிடா’ படத்தின் ‘வச்சிந்தே’ வீடியோ பாடல் 182 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு முதல் இடத்தில் இருந்து வந்தது.

இந்த சாதனையையும் இன்று காலை 183 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியதன் மூலம் தகர்த்தெறிந்தமை குறிப்பிடத்தக்கது.