இரக்கமின்றி மனைவியை எரித்துக் கொலை செய்த 2வது கணவர்!!

மனைவியை எரித்துக் கொலை செய்த 2வது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்தவர் மஞ்சுளா (34). இவருக்கும் தயாளன் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

தயாளனுடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்த மஞ்சுளா தாய் வீட்டில் சென்று வசித்தார்.

அப்போது பெருமாள் (41) என்ற லொறி ஓட்டுனருடன் மஞ்சுளாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பெருமாளும் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர்.

இதையடுத்து பெருமாளும், மஞ்சுளாவும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.

பெருமாள், லொறி வேலைக்குச் சென்றால், மாதத்துக்கு இருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவார்.

இந்நிலையில் மனைவிக்கு அவர் போன் செய்தபோது, மஞ்சுளாவின் போன் எண் நீண்ட நேரமாக பிஸியாகவே இருந்துள்ளது.

இதனால், பெருமாளுக்கு மஞ்சுளாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. 2012-ம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி வீட்டுக்கு திரும்பிய பெருமாள் மஞ்சுளாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, அறிமுகமில்லாத சில நபர்களின் எண்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அவர்களுடன் பலமணி நேர உரையாடலில் மஞ்சுளா இருந்துள்ளதைப் பெருமாள் கண்டுபிடித்தார்.

இதுதொடர்பாக இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த பெருமாள், மனைவி மஞ்சுளாவை கொடூரமாகத் தாக்கினார்.

பின்னர் டீசலை மஞ்சுளா மீது ஊற்றித் தீ வைத்து எரித்து கொலை செய்தார். இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றவாளி பெருமாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.