இரவு விழுந்த குழியில் மக்கள் பகலில் விழ தயாரில்லை!

அரசாங்கத்தை கவிழ்க்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயார் என்ற போதிலும் அந்த கட்சியுடன் இணைந்து கூட்டணியாக தேர்தலில் போட்டியிடுவதை மக்கள் விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவங்கொட உடுகம்பள பிரதேசத்தில் கட்சியின் அங்கத்தினருடனான சந்திப்பில் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து மீண்டும் மைத்திரியை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வரும் தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட சிலருக்கு உள்ளது.

எனினும் நாட்டை நேசிக்கும் மக்கள் மகிந்த ராஜபக்சவே நாட்டின் தலைவராக வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

மக்கள் இரவு விழுந்த குழியில் பகலில் விழ தயாரில்லை. தயாசிறிகள் வெட்டும் குழியில் நாங்கள் விழ தயாரில்லை.

கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் நாங்கள் தெளிவான மனநிலையில் கவனமாக கலந்துக்கொள்கிறோம். இம்முறை எங்களை ஏமாற்ற முடியாது.

எங்களது ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் தெரிவு செய்து விட்டோம்.

நாடே எதிர்பார்க்கும் வேட்பாளரை மகிந்த ராஜபக்ச உரிய நேரத்தில் அறிவிப்பார். யார் என்ன கூறினாலும் நாட்டின் அடுத்த தலைவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக தெரிவு செய்யப்படுவார் எனத் தெரிவித்தார்.