இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி! நாட்டில் நடக்கப் போவது என்ன?

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அரசாங்கத்தில் இருந்து விலகியதாக சபாநாயகரிடம் அறிவித்துள்ளதாக முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமர் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி செயலகம், அதனுடன் அமைச்சரவையை கலைப்பதாக குறிப்பிட்டுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு,

மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடு என குறிப்பிட்டிருந்தார்.

அது அரசியலமைப்பிற்கு எதிரான மற்றும் சட்டவிரோத செயல் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலகியவுடன், அரசாங்கத்தை கலைக்க முடியாதென சட்டத்தரணி அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

எனவே பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதும் வேறு பிரதமரை நியமிப்பதும் சட்டவிரோதமான செயல் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மகிந்த ராஜபக்ச தலைமைத்துவம் வழங்கும் குழுவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் தான் இன்னும் பிரதமாக செயற்படுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் அடுத்த பிரதமர் யார் என்பது தொடர்பில் கொழும்பு அரசியலில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தன் நீண்ட நாள் நண்பன் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

எனவே மஹிந்த ராஜபக்ஷவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.