இலங்கை்கு தீவிர பாதுகாப்பு! உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, தெஹிவளை மற்றும் கொழும்பின் பிரபல நட்சத்திர விடுதிகளும் இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், இலங்கை முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஹோட்டல்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நேற்று 8 இடங்களில் தொடர் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்ததுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட 13 பேர் மாலை வரை கைதுசெய்யப்பட்டனர். தொடர்ச்சியாக நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையில் மேலும் 8 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.