இலங்கை தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த கோடிஸ்வரரின் உருக்கமான அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் தங்களது மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க்கைச் சேர்ந்த கோடிஸ்வர தம்பதியினர் உருக்கமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

இந்த தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் டென்மார்க்கைச் சேர்ந்த பெரிய கோடீஸ்வர தொழிலதிபர் ஆண்டர்ஸ் ஹோல்ச் மற்றும் அன்னி தம்பதிகளின் மூன்று பிள்ளைகளான அல்மா (15), அக்னீஸ் (12) மற்றும் அல்பிரட் (5) ஆகிய மூவரும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் பிள்ளைகளை இழந்து தவித்து கொண்டிருக்கும் தங்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி மனதை தேற்றியவர்களுக்கு ஆண்டர்ஸ் – அன்னி தம்பதி நன்றி கூறி உருக்கமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அதில், “எங்கள் மூன்று பிள்ளைகளை இழந்த பின்னர் எங்களுக்கு கிடைத்த இரங்கல்கள், அனுதாபங்கள் மற்றும் மனதை தேற்றும் வார்த்தைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

எங்களுக்கு ஆறுதல் அளிக்க கூறப்பட்ட பலவார்த்தைகள் எங்கள் இதயத்தை தொட்டது. இலங்கை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் எங்களின் இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.

எங்கள் மூன்று குழந்தைகளின் நினைவுகள் மற்றும் எண்ணங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் இருக்கும்” என தெரிவித்துள்ளனர்.