உடற்பயிற்சி செய்யும் பெண்கள் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் புதிய கண்டுபிடிப்பு!

பெண்களுடைய மார்பகங்களின் அளவு, அவர்கள் எவ்வாறு உடற்பயிற்சி செய்கிறார்கள் என்பதை பாதிப்பதாக அண்மைய அவுஸ்திரேலிய ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வொலொங்கொங் (Wollongong) பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளுக்கமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான மார்பகங்களைக் கொண்டிருக்கும் பெண்கள், உடற்பயிற்சியில் ஈடுபட தயக்கம் காட்டுவதை ஆய்வின் முடிவுகள் தெரிவித்தன.

18 வயதுக்கும் 75 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 350 பெண்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகளை, ஆய்வாளர்கள் Journal of Science and Medicine in Sports சஞ்சிகையில் வெளியிட்டனர்.

இரண்டுக்கும் இடையில் என்ன தொடர்பு உள்ளது?

உடற்பயிற்சியில் ஈடுபடும்போது மார்பகங்களில் வலி ஏற்படும். அதனால், பெண்களுக்குப் பெரிய அளவிலான மார்பகங்கள் இருந்தால், அவர்களுக்கு வலி அதிகரிக்கும்.

அவ்வாறு ஏற்படும் அதிக வலியின் காரணமாக, அத்தகைய பெண்கள் உடற்பயிற்சியில் ஈடுபடத் தயக்கம் காட்டி வரும் போக்கை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

தகுந்த உள்ளாடைகளை அணிதல், மெதுவோட்டத்திற்குப் பதிலாக நீச்சலில் ஈடுபடுதல் முதலான வழிமுறைகளைக் கையாண்டால் வலி குறையும் என்று ஆய்வாளர்கள் பரிந்துரைத்தனர்.